Our Feeds


Tuesday, August 20, 2024

Zameera

ஆபிரிக்காவில் குரங்கு அம்மை நோயால் 18,737 பேர் பாதிப்பு


 ஆபிரிக்காவில் குரங்கு அம்மை நோயால் இதுவரை 18,737 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குரங்கு அம்மை நோய் ஆபிரிக்க நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த நோய்த் தாக்குதலால் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 18,737 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த 1 வாரத்தில் மட்டும் 1,200 பாதிப்புகள் பதிவானதாகவும் ஆபிரிக்க ஒன்றிய சுகாதார நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.

மூன்று வகைகளில் இந்த வைரஸ் இருப்பதாகவும், அதில் கிளேட் 1 பி வகைமை உயிரிழப்பை ஏற்படுத்தும் வகையில் மிகவும் ஆபத்தானது மற்றும் வேகமாகப் பரவக்கூடியது என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக உலக சுகாதார நிறுவனம் கடந்த புதன் (ஒகஸ்ட் 14) அன்று உலகளாவிய சுகாதார அவசரநிலையை அறிவித்தது.

இன்று வரை, 12 ஆபிரிக்க ஒன்றிய உறுப்பு நாடுகளில் 3101 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு, 15,636 பேர் சந்தேகத்தின் பேரில் பரிசோதனையில் இருப்பதாகவும், அதில் 548 பேர் உயிரிழந்து இறப்பு விகிதம் 2.89% பதிவானதாகவும் ஆபிரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்துள்ளன.

கிளேட் 1 பி வகைமை வைரஸ் கடந்த செப்டம்பர் 2023-ல் முதலில் கண்டறியப்பட்ட கொங்கோ ஜனநாயகக் குடியரசு நாட்டில் இதுவரை 1,005 பாதிப்புகள் கண்டறியப்பட்டு 222 பேருக்கு நோய்த் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஒரு வாரத்தில் 24 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த வாரத்தில் ஆப்ரிக்காவுக்கு வெளியே சுவீடன் மற்றும் பாகிஸ்தானில் முதல் முறையாக குரங்கு அம்மை பாதிப்பு பதிவாகியுள்ளது.

உலக சுகாதார அமைப்பு மருத்துவ அவசரக் குழுவின் பரிந்துரைகளை விரைவில் வெளியிடும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், தன்னார்வ அமைப்புகளுடன் சேர்ந்து தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க உலக சுகாதார அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

குரங்கு அம்மை என்பது விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய வைரஸ் ஆகும். நெருக்கமான உடல் தொடர்பு மூலம் மனிதர்களிடையேயும் பரவக்கூடியது.

குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தசைகளில் வலி மற்றும் பெரிய கொப்புளங்கள் போன்ற காயங்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

மற்ற வகை வைரஸ்கள் உடலின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆனால் கிளேட் 1 பி வகைமை உடல் முழுவதும் தோல் வெடிப்புகளை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »