வெற்றிடமாக உள்ள தேசிய பட்டியலை இரத்தினபுரி தமிழ் மக்களுக்காக சஜித் கொடுப்பாரா? மனோவால் தான் பெற முடியுமா? என்று கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் எம். பி. ஹரின் பெர்னாண்டோவின் தேசிய பட்டியல் வெற்றிடமாக உள்ள நிலையில் கடந்த பொது தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி படி தேசிய பட்டியல் எம்.பி. ஒன்று வழங்கப்படவில்லை. இதனால் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்த மக்கள் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளானார்கள். அதனை நிவர்த்திசெய்யக்கூடிய இன்னுமொரு வாய்ப்பு ஐக்கிய மக்கள் சக்திக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் கைகூடியுள்ளது.
கடந்த 2015 மற்றும் 2020 பொது தேர்தல்களில் இரத்தினபுரி, கேகாலை, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்ட தமிழ் மக்கள் பெருவாரியாக தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்தனர். எனினும் அம்மாவட்டங்களில் இருந்து தமிழ் பிரதிநிதி ஒருவர் தெரிவாக முடியாமல் போனது. எனவே இம்மாவட்டங்களில் இருந்து கிடைத்த பெருவாரியான வாக்குகள் மூலம் ஐக்கிய மக்கள் சக்தி அதிகமான தேசிய பட்டியல் எம்.பி.க்களை பெற்றுக்கொண்டது.
எனினும் தமிழ் மக்களின் வாக்குகளுக்கு மதிப்பளித்து, குறைந்தபட்சம் ஒரு தேசிய பட்டியல் எம்.பி.யை கூட பெற்றுக்கொள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைகள் முயற்சிக்கவில்லை. அதற்கு பதிலாக, அவர்களின் வரப்பிரசாதங்களையே உயர்திக்கொண்டனர். இல்லையெனில், இப்போதாவது வெற்றிடமாக உள்ள தேசிய பட்டியல் எம்.பி.யை இரத்தினபுரிக்கு பெற்றுக்கொடுக்க முடியும். ஆனால் சஜித் அதனை பெற்றுக்கொடுக்கப்போவதில்லை.
வாக்களித்த இரத்தினபுரி மக்களை பார்த்து 5,000 வாக்குகள் எங்கே போனது, இருநூற்று ஐம்பது வாக்குகள் எங்கே போனது என குறைகூறுவதை நிறுத்துங்கள். மக்கள் சரியாகத்தான் வாக்களித்திருக்கின்றார்கள். ஆனால் தலைவர்கள் என சொல்லிக்கொள்பவர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை.
இப்போது இரத்தினபுரி, கேகாலை தமிழ் மக்களுக்கு கண் துடைப்பாக ஐக்கிய மக்கள் சக்தியில் முக்கிய பதவிகள் என்கின்றார்கள். ஐக்கிய மக்கள் சக்தியில் எந்த ஒரு முக்கிய பதவியும் கிடையாது வெறுமனே தேசிய பட்டியல் எம்.பி. கதையை மூடி மறைத்து தங்கள் மீதுள்ள குற்றச்சாட்டில் இருந்து மீண்டுகொள்வதற்கான ஒரு நாடகம் மட்டுமே.
இரத்தினபுரி தமிழ் மக்களை ஏமாற்றாது நாட்டின் அதியுயர் சபையான பாராளுமன்றத்திற்குரிய உறுப்புரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுங்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.