Our Feeds


Monday, August 26, 2024

Sri Lanka

சஜித்துக்கும் அனுரவுக்கும் ஜனாதிபதியின் பகிரங்க சவால்!


இனியும் மக்களுக்கு பொய் சொல்லிக் கொண்டிருக்காமல் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைய மூலம் பகிரங்கமான கலந்துரையாடல் ஒன்றுக்கு வருமாறு சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு சவால் விடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இதன் ஊடாக, மேடைகளில் அவர்கள் சொல்லும் விடயங்களில் உள்ள உண்மைத் தன்மையை மக்களால் கண்டு கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும், அவ்வாறு நடந்தால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் எனவும் தெரிவித்த ஜனாதிபதி, வரிகளை குறைப்பதாகவும் பொருட்களின் விலைகளை குறைப்பதாகவும் தமது கொள்கைப் பிரகடனங்களில் சஜித் பிரேமதாசவும், அனுரகுமார திஸாநாயக்கவும் மக்களை ஏமாற்றி நாட்டை நாசமாக்க முயற்சிப்பதாகவும், இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும்  ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பொருட்களின் விலைகளையும் வரிகளையும் குறைக்க தானும் விரும்புவதாகவும்,  எனினும், ரூபாயை பலப்படுத்தி, சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் பிரகாரம் செயற்படுவதன் மூலம் மாத்திரமே தன்னால் அதனைச் செய்ய முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அதனைத் தவிர வேறு மாற்றுவழி இருந்தால் உடனடியாக ஐ.எம்.எப் உடன் நடத்தும் பேச்சுவார்த்தையில் அதனை சமர்ப்பித்து கருத்தரிந்து கொள்ளுமாறு சஜித் பிரேமதாஸவிடமும் அநுர திசானாயக்கவிடமும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்.

பிட்டகோட்டையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று பிற்பகல் (25) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட சம்மேளனக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இந்த விசேட சம்மேளனத்தில் பெருமளவிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்றிய  ரணில் விக்ரமசிங்கவிற்கு இலங்கையைக் கட்டியெழுப்பும் பணியை மேற்கொள்ள ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுவதற்கும் அவரின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதற்கும் ஐ.தே.க ஆதரவாளர்களின் உடன்பாட்டை தெரிவிப்பதற்குமான பிரேரணை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர்  பாலித ரங்கேபண்டாரவினால் கட்சி சம்மேளனத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த பிரேரணையை ஐ.தே.க தேசிய அமைப்பாளர் சாகல ரத்னாயக்க வழிமொழிந்தார். அதனையடுத்து அனைவரும் கைகளை உயர்த்தி ஏகமனதாக தீர்மானத்தை நிறைவேற்றினர்.

இதன் போது மறுசீரமைக்கப்பட்ட சிறிகொத்த கட்சி தலைமையகமும் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது.

இங்கு மேலும் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

"நான் எதற்காக ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டேன். 1946 ஆற்றிய உரையில் இலங்கையை பாதுகாத்தால் மாத்திரமே ஐக்கிய தேசிய கட்சியின் இருப்பு பாதுகாக்கப்படும் என்று டீ.எஸ். சேனநாயக்க கூறினார். எனவே ஐக்கிய தேசிய கட்சியினர் என்ற வகையில் டட்லி சேனநாயக்கவும், ஜே.ஆர்.ஜயவர்தனவும், பிரேமதாசவும் எமக்கு அதனையே கற்பித்தனர்.

அதனால் இலங்கையன் என்ற வகையிலேயே நாட்டை காக்க ஜனாதிபதி பதவியை ஏற்றேன். அது தவறா? நீங்கள் வரிசைகளில் நிற்பதை கண்டேன். அந்த நேரத்தில் வரிசையில் மக்கள் அல்லல் பட்டதை கண்டேன். பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கினேன்.  அதனை செய்யாமல் ஜே.வி.பி.யும், ஐக்கிய மக்கள் சக்தியும் சாபத்தை தேடிக்கொண்டுள்ளன.

சஜித் பிரேமதாச உள்ளிட்டவர்கள் பிரேமதாச ஜனாதிபதியுடன் பணியாற்றியவர்கள் இல்லை. அவரை நானே ஐக்கிய தேசிய கட்சிக்கு கொண்டு வந்தேன். கட்சியைப் பாதுகாப்பது பற்றி அவர்களுக்கு தெரியாது. டீ.எஸ். சேனநாயக்கவை பற்றியும் அவர்களுக்குத் தெரியவில்லை. ஐக்கிய தேசிய கட்சியினர் முதலில் நாட்டை பற்றியே சிந்திக்க வேண்டும்.

பொருளாதாரத்தைப் பாதுகாக்க 3 பில்லியன் டொலர்கள் தேவைப்படும் என்பதை 2020 ஆம் ஆண்டு தேர்தலில் நான் வௌிப்படையாக கூறினேன். ஐக்கிய மக்கள் சக்தியும் ஜே.வி.பி.யும் அதனை சொல்லவில்லை. அதனால் நான் தோற்றுப்போனேன். ஆனால் பிரச்சினையின் தன்மையை நான் அறிந்திருந்தேன். உலக வங்கி, சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி உதவிகளைக் கோரினேன். அந்த உதவியுடன் மீண்டு வர முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.

அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நாட்டை விட்டுச் சென்றதும் எவரும் நாட்டை ஏற்க வரவில்லை. சபாநாயகர் தலைமையிலான குழுவை அமைக்கச் சொன்னார்கள்.  எனக்கு உதவ மறுத்தார்கள். டலஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவளித்தார்கள். தாம் ஐக்கிய தேசிய கட்சியினர் இல்லை என்று நிரூபித்தனர். பிரேதமதாச ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை  கொண்டுவரப்பட்டபோதும் நானே முன்வந்து அவரைப் பாதுகாத்தேன். அவர் மரணித்த போதும் அந்த இடத்திற்கு நானே உடனடியாக சென்றுப் பார்த்தேன். அவர்கள் அவற்றை மறந்துவிட்டனர்.

கட்சியைப் பாதுகாக்கவே நான் ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டேன். 1971 களில் ஜே.வி.பி கலவரம் ஏற்பட்ட காலத்தில் அரசாங்கத்துக்கு பக்கபலமாக நிற்க தீர்மானித்தோம். அப்போதும் நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமே எமக்கு இருந்தது. 1989 களில் மீண்டும் அந்த கலவரம் வந்தபோதும் சிறிமாவோ பண்டாரநாயக்கவிற்கு அனுருத்த ரத்வத்தவுடன் வருமாறு அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பையேற்று அவரும் வந்தார். இராணுவத்தின் உதவிகளை வழங்கவும் இணங்கினார். அப்போதைய ஜனாதிபதி பிரேமதாச இறந்த பின்பும் அவர்கள் கட்சியிலிருந்து எந்தவொரு வேட்பாளரையும் களமிறக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி அலுவலகத்திற்கே வந்து அறிவித்தார். அப்படியொரு நல்ல ஒற்றுமை எம்மிடையே காணப்பட்டது.

அவற்றைப் பற்றி தெரியாதவர்கள் வௌியில் சென்று கூச்சலிடுகிறார்கள். அவர்கள் தான் நெருக்கடி வந்தபோதும் ஓடி மறைந்தனர். அருகிலிருந்த கழிப்பறையை தேடி ஓடினர். நான் நாட்டைப் பொறுப்பேற்றேன். நாட்டை சீர்ப்படுத்த எனக்கு ஒரு குழு தேவைப்பட்டது. அதற்காக ரஞ்சித் சியம்லாபிட்டிய, செஹான் சேமசிங்க, அலி சப்ரி , கஞ்சன விஜேசேகர இவர்களோடு பணியாற்றினேன். அந்த முயற்சிகள் வெற்றியளித்தன.

பிரதமர் பாராளுமன்றத்தை வழிநடத்தினார். மனுஷ வௌிநாட்டு துறையை பாதுகாத்தார். ஹரீன் சுற்றுலா துறையை பலப்படுத்தினார். நிமல் சிறிபால டி சில்வா விமானத்துறையை பலப்படுத்தினார்.

உலக வங்கி ஐஎம்எப் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் 18 கடன் வழங்கிய நாடுகளுடன் பேசினோம். தற்போது அவர்களுடனான ஒப்பந்தத்துடன் செயற்படுகிறோம். எமக்கு கஷ்டமான காலம் இருந்தது. பணத்தை அச்சிட முடியவில்லை. கடன்பெற முடியவில்லை. அதற்கான வரியை அதிகரித்து, கட்டணங்களை அதிகரித்து வருமானத்தை அதிகரித்தோம். அந்த சுமைகளைத் தாங்கிய மக்களுக்கு நன்றி.  இன்று சுமை குறநை்திருக்கிறது.

இன்று மின்,கேஸ் கட்டணங்கள் குறைந்துள்ளன. சுமைகள் ஓரளவிற்கு குறைந்துள்ளன. ரூபாவின் பெறுமதியை வலுப்படுத்திய பின்னர் ஏனைய சலுகைகளை வழங்குவோம். மேற்கூறிய ஒப்பந்தங்களின் இலக்குகளையும் அடைய வேண்டும். அவற்றை அடைந்தால் நாடு வலுவடையும். அதுவே அரசாங்கத்தின் திட்டமாகும்.

எதிர்கட்சியினர் பொருட்களின் விலையை குறைப்பதாகச் சொல்கிறார்கள். வரியை குறைத்தால் வருமானம் குறையும். அதனால் நாம் மீண்டும் 2022ஆம் ஆண்டின் நிலைக்குச் செல்ல வேண்டும். எனவே ரூபாயின் பெறுமதியை அதிகரித்த பின்னர் வரியை குறைப்பதே நல்லதாகும்.

நாம் இரவில் விழுந்த குழியில் பகலிலும் விழக்கூடாது. கோட்டாபய ராஜபக்‌ஷவும் ஐ.எம்.எப் பேச்சை கேட்காமலேயே வரியைக் குறைத்தார். அதனால் ஒப்பந்தங்களை மாற்ற வேண்டுமானால் மீண்டும் 18 நாடுகளுடனும் பேச வேண்டியிருக்கும். அதனால் எதிர்க்கட்சிகள் பொய் சொல்கிறார்கள் என்பது தெரிகிறது. எதற்காக பொய் சொல்கிறார்கள் என்பதே எனது கேள்வியாகும். இந்த முயற்சிகளை மேற்கொள்ள எமக்கு இரு வருடங்கள் தேவைப்பட்டன. இந்த ஒப்பந்தங்களை மாற்ற எந்த தரப்பும் இணக்கம் தெரிவிக்காது.

சர்வதேச நாணய நிதியம் நினைத்தாலும் அதனை தனியாக செய்ய முடியாது.  கிரேக்கத்திலும் இதுவே நடந்தது.  அந்த நாட்டில் பொருளாதாரம் சரிவடைந்தது.  அப்போது அந்த நாட்டின் எரிக்கட்சி போலி வாக்குறுதிகளை வழங்கி தேர்தலை வென்றது.  ஐ.எம்.எப் நிபந்தனைகளை மாற்றுவோம் என்றது. அந்த நிபந்தனைகளை மாற்ற பொது மக்கள் வாக்கெடுப்பு நடத்துவதாகவும் அந்நாட்டில் புதிய பிரதமர் மேற்படி அமைப்புக்களுக்கு அறிவித்தார். ஆனால் மறுதினமே அந்த அமைப்புகள் நிபந்தனையை மாற்ற முடியாதென அறிவித்தன.

ஆனாலும் அந்த நாட்டில் ஒப்பந்தத்தை இரத்துச் செய்ய பொது மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பின்னர் ஒப்பந்தத்தை இரத்துச் செய்ததன் விளைவாக அந்த நாட்டின் பொருளாதாரம் முற்றாக சரிந்து போனது. அதனால் அந்த நாட்டின் நிதி அமைச்சர் மீண்டும் மேற்படி மூன்று அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களின் நிபந்தனைகளுக்கு இணங்கினார். ஆனாலும் நாட்டில் 13 வீதமாக காணப்பட்ட வரியை 23 சதவீதமாக அதிகரிக்க வேண்டிய நிலை வந்தது.

அதனால் நமது நாட்டிலும் எதிர்கட்சியினர் என்ன செய்ய போகிறார்கள் என்பதை வௌிப்படையாக கூற வேண்டும். இந்த ஒப்பந்தத்தில் கைசாத்திட்டதன் பலனாக எமக்கு உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து  மாதாந்தம் 700 மில்லியன் டொலர்கள் கிடைக்கும். அதற்கு ஜப்பானும் உதவிகளை வழங்குவதாக கூறியுள்ளது.

தற்போது நம்மிடம் இருக்கும் பணம் ஜனவரி வரையில் போதுமானதாக இருக்கும்.  ஒக்டோபர் மாதத்தில் அவர்கள் நாட்டுக்கு வந்து நாட்டின் நிலையை ஆராய்வர். ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியிலிருந்தால் இதனை முன்னோக்கி கொண்டுச் செல்லும் விதம் குறித்து பேசுவோம். ஜே.வி.பியும், ஐக்கிய மக்கள் சக்தியும் என்ன சொல்ல போகிறார்கள். இதனைத் திருத்தம் செய்வோம் என்று சொல்லுவார்கள். அதனை கேட்டால் அவர்கள் நிதி வழங்குவதை நிறுத்திவிடுவர்.  மீண்டும் பழைய யுகத்திற்கு செல்ல வேண்டியிருக்கும்.  இதனை பேசி முடிக்கவே மூன்று நான்கு மாதங்கள் தேவைப்படும். 5 மாதங்கள் நாட்டு மக்கள் பணமின்றி கஷ்டப்பட முடியாது.

எனவே, எதிர்க்கட்சிகள் அதற்கான மாற்று வழிகளை குறிப்பிட வேண்டும். நாட்டை அழித்துவிட வேண்டாம். மூன்று கட்சிகளும் இணைந்து சர்வதேச நாணய நிதியத்துடன் பேசுவோம். அந்த விடயத்தை முழு நாட்டுக்கும் சொல்வோம். இறுதியில் மூச்சுவிடவும் வரி விதிக்கும் நிலைக்கு வந்துவிடக்கூடாது. மக்களுக்கு உண்மையை சொல்லுங்கள்.  அதனால் நாட்டு மக்கள் சிலிண்டர் சின்னத்து வாக்களியுங்கள். இல்லாவிட்டால் சிலிண்டர் அற்ற யுகம் மீண்டும் வரும். அதை நினைத்து அழ வேண்டாம்." என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »