Our Feeds


Saturday, September 21, 2024

Zameera

சர்வதேச ஒலிம்பிக் பேரவையின் தலைவர் பதவிக்கு 7 பேர் போட்டி


 சர்வதேச விளையாட்டு அமைப்பில் அதிகாரமிக்க, வலிமையான பதவியான சர்வதேச ஒலிம்பிக் பேரவையின் (ஐ.ஓ.சி.) தலைவர் பதவிக்கு 7 பேர் போட்டியிருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது தலைவராக தாமஸ் பேச் (ஜெர்மனி) 2013-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். 12 ஆண்டு பதவி காலத்தை நிறைவு செய்யும் அவர் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் பதவி விலகுகிறார். இதனால் ஐ.ஓ.சி.யின் புதிய தலைவரை தேர்வு செய்யும் பணி இப்போதே தொடங்கி விட்டது. தலைவர் பதவிக்கு அதன் உறுப்பினர்கள் 7 பேர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் உலக தடகள சம்மேளனத்தின் தலைவராக இருக்கும் இங்கிலாந்தை சேர்ந்த 67 வயதான செபாஸ்டியன் கோவும் ஒருவர். முன்னாள் ஓட்டப்பந்தய வீரரான இவர் 1980, 1984-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் 2 தங்கம் மற்றும் இரு வெள்ளிப்பதக்கம் வென்றவர் ஆவார். என்றாலும் அவர் கடும் சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். ஐ.ஓ.சி.யின் வயது வரம்பு 70. தேர்தலின் போது அவருக்கு 68 ஆக இருக்கும். ஆனால் வயது வரம்பு 4 ஆண்டுகள் வரை தளர்த்தப்பட அனுமதி உண்டு. அந்த வகையில் பார்த்தால் செபாஸ்டியன் கோ புதிய தலைவராக தேர்வானால் 6 ஆண்டுகள் அந்த பதவியில் நீடிக்க முடியும்.

சிம்பாப்வேயை சேர்ந்த முன்னாள் நீச்சல் வீராங்கனையும், இதன் நிர்வாக குழு உறுப்பினருமான 41 வயதான கிறிஸ்டி கவன்ட்ரியும் களத்தில் உள்ளார். சிம்பாப்வே விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் கவன்ட்ரிக்கு தற்போதைய தலைவர் தாமஸ் பேச்சின் ஆதரவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

130 ஆண்டுகால ஒலிம்பிக் பேரவையின் வரலாற்றில் இதுவரை 9 ஆண்கள் மட்டுமே தலைவர் பதவியை அலங்கரித்துள்ளனர். எனவே கவன்ட்ரி தலைவராக தேர்வானால் அந்த பொறுப்புக்கு வரும் முதல்பெண்மணி என்ற பெருமையை பெறுவார்.

ஐ.ஓ.சி.யின் 4 உபதலைவர்களில் ஒருவரான ஸ்பெயினை சேர்ந்த ஜூவான் ஆன்டோனியா சமாரஞ்ச் ஜூனியரும் முக்கியமானவர். இவரது தந்தை சமாரஞ்ச் 21 ஆண்டுகள் இந்த உயரிய பதவியில் இருந்துள்ளார். மேலும் சர்வதேச சைக்கிளிங் சங்க தலைவர் டேவிட் லாப்பரடின்ட் (பிரான்ஸ்) சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் சங்க தலைவர் மோரினாரி வதானாப் (ஜப்பான்), பெரும் கோடீஸ்வரரான சர்வதேச ஸ்கை மற்றும் ஸ்னோபோர்டு தலைவர் ஜோஹன் எலியாஸ் (சுவீடன்), ஜோர்டான் நாட்டு இளவரசர் பைசல் பின் ஹூசைன் ஆகியோரும் போட்டியாளர்களாக உள்ளனர்.

சர்வதேச ஒலிம்பிக் பேரவையின் கூட்டம் அடுத்த ஆண்டு மார்ச் 18 முதல் 21 வரை கிரீஸ் தலைநகர் ஏதென்சில் நடக்கிறது. இதில் தலைவர் பதவிக்கான தேர்தல் நடக்கிறது. ஐ.ஓ.சி. உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க தகுதி படைத்தவர்கள். மொத்தம் 111 பேர் வாக்களிப்பார்கள். அதிக வாக்குகள் பெறுபவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். புதிய தலைவரின் பதவி காலம் 8 ஆண்டுகள் ஆகும். மீண்டும் தேர்வானால் மேலும் 4 ஆண்டுகள் பதவியில் தொடரலாம்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »