Our Feeds


Tuesday, September 24, 2024

Sri Lanka

மனிதநேய இராட்சியம் சவுதி அரேபியாவின் 94வது தேசிய தினம் | இலங்கைக்கு சவுதி வழங்கிய பாரிய உதவிகள்



இலங்கைக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையிலுள்ள இராஜதந்திர உறவுகள் மிக பழமையானவை, இன்னும் மிக வலுவானவையும் கூட. வரலாறு நெடுகிலும், இலங்கை சவுதி அரேபியா ஆகிய இரண்டு நாடுகளுக்குமிடையே உள்ள தொடர்புகளை பார்க்கின்றபோது இவ்விடயம் மிகத் தெளிவாகின்றது. 


சவுதி அரேபியா இலங்கையின் பல்வேறுபட்ட முன்னேற்றங்களில் பங்கு கொண்டுள்ளது, அதிலும் மிக விசேஷமாக கல்வி, சுகாதாரம், நீர், மின், போக்குவரத்து, பொருளாதாரம் ஆகிய விடயங்களை ஈண்டு கூறலாம்.1984 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை சவுதி அரேபியாவின் பலதரப்பட்ட அரச நிறுவனங்களினூடாக இலங்கைக்கு 458,353,631 அமெரிக்க டொலர்கள் உதவியாக வழங்கப்பட்டுள்ளன, அவை 55 பாரிய திட்டங்களை அமுல்படுத்துவதற்காக செலவிடப்பட்டுள்ளன.  


2019ம் ஆண்டு ஜூலை மாதம் இரண்டாம் திகதி, இலங்கையிலுள்ள சவுதி அரேபிய தூதரகம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், இலங்கையின் பல்வேறுபட்ட துறைகளின் முன்னேற்றத்திற்கு சவுதி அரேபியா ஆற்றிய பங்களிப்புக்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன, அவை பின்வருமாறு: 


1- நீர் வினியோக வடிகாலமைப்பு அபிவிருத்தித் திட்டம்: (26.64 மில்லியன் அ. டொ).


2- மின்சார அபிவிருத்தி திட்டம்: (12.83 மில்லியன் அ. டொ)


3- வயம்ப பல்கலைக்கழக அபிவிருத்தி திட்டம்: (28 மில்லியன் அ. டொ)


4- சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீட நிர்மாணமத் திட்டம்: (50 மில்லியன் அ. டொ)


5- கொழும்பு பெரிய வைத்தியசாலையில், நரம்புத் தளர்ச்சி, வலிப்பு, பெட் ஸ்கேனர் போன்றவற்றிற்கென வாட்டுக்கள் கொண்ட ஒரு விஷேட கட்டிடம்: (32 மில்லியன் அ. டொ)


6- கொழும்பில் வைத்திய சேவைகளை மேம்படுத்தல் திட்டம்: (14.93 மில்லியன் அ. டொ)


7- மகாவலி கங்கை  (B வலையம்) அபிவிருத்தி திட்டம்: (22.66 மில்லியன் அ. டொ)


8- களுகங்கை அபிவிருத்தி திட்டம்: (46 மில்லியன் அ. டொ)


9- களுகங்கையுடன் தொடர்பட்ட இன்னொரு அபிவிருத்தி திட்டம்: (45 மில்லியன் அ டொ)


10- திருமலை - மட்டக்களப்பு அதிவேக வீதி அபிவிருத்தி திட்டம்: (10.66 மில்லியன் அ. டொ)


11. பேராதெனிய- பதுளை -செங்கல்லடி அதிவேக வீதி அபிவிருத்தி திட்டம்:  (60 மில்லியன் அ. டொ) 


12. இன்னொரு வீதி அபிவிருத்தி திட்டம்: (60 மில்லியன் அ. டொ)


என மொத்தமாக 408.72 மில்லியன் அ. டொ ரைக் கொண்ட பங்களிப்பு சவுதி அரேபியாவினால் இலங்கைக்கு ஒரு குறுகிய காலத்தில் வழங்கப்பட்டுள்ளது. 


இதற்கும் அதிகமாக இன மத மொழி வேறுபாடுகள் இன்றி இலட்சக்கணக்கான இலங்கையர்கள் அங்கு பணி புரிகின்றனர். அது எமது நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கின்றது. 


அத்துடன் இலங்கையிலுள்ள அதிகமான தொண்டர் நிறுவனங்கள் சவுதி அரேபியாவின் தொண்டர் நிறுவனங்களுடனும் அரசாங்கத்துடனும் தனிநபர்களுடனும் தொடர்பு பட்டு இலங்கையர்களுக்கு பல உதவிகளையும் வழங்கி வருகின்றன. அந்நிறுவனங்களிலிருந்து இலங்கைக்கு வரும் பணம் இலங்கையின் பொருளாதாரத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவது போன்றே இலங்கையர்களின் தேவைகளை கணிசமாக நிறைவேற்றுகின்றது, அதன் மூலமாக இலங்கை அரசின் சுமையின் ஒரு பகுதியை அவை தாங்கிக் கொள்கின்றன, விதவைகள் அனாதைகளை பராமரிப்பதல், தனிப்பட்ட குடும்பங்கள், வீடுகள், கிராமங்களுக்கு தண்ணீர் வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தல், மின்சார வசதிகளை பெற்றுக்கொள்வதற்காக உதவுதல், அனர்த்தங்களின் போது நிவாரணங்களை வழங்குதல் போன்றன அடிக்கோடிட்டு கூற முடியுமான சில பணிகளாகும். 


நேர்மையாக சிந்திக்கும் எவரும் இவற்றை பார்க்கும் போது அந்நாட்டிற்கு நன்றிக்கடன் பட்டவராகவே உணர்வார்.


சவுதி அரேபியாவிலுள்ள அதிகமான பல்கலைக்கழகங்கள், இலங்கை மாணவ மாணவிகளுக்கும் முழுமையான புலமை பரிசில்களை வழங்கி, இலவசப் பல்கலைக்கழகக் கல்வியையும் வழங்குகின்றதன: 


1- மதீனாவிலுள்ள இஸ்லாமிய பல்கலைக்கழகம்.


2- ரியாத் நகரில் உள்ள மன்னர் ஸஊத் பல்கலைக்கழகம்.


3- மன்னர் முஹம்மத் பின் ஸஊத் பல்கலைக்கழகம்.


4- மக்கா நகரிலுள்ள உம்முல் குறா பல்கலைக்கழகம்.


5- நஜ்ரான் பல்கலைக்கழகம்.


6- மதீனாவிலுள்ள தைபா பல்கலைக்கழகம்.


7- ரியாத் நகரிலுள்ள இளவரசி நூரா பெண்கள் பல்கலைக்கழகம்.


இப்பல்கலைக்கழகங்களில் எமது நாட்டு மாணவ மாணவிகள் தற்பொழுதும் கல்வி பயின்று வருகின்றனர்.


சவுதி  அரேபியாவினால் வழங்கப்படுகின்ற முழுப் புலமை பரிசில்: 850 ரியாலைக் கொண்ட (68000 இலங்கை ரூபாய் ) மாதாந்தக் கொடுப்பனவையும், இலவச மருத்துவ வசதி, இலவச விடுதி வசதி, விலை குறைக்கப்பட்ட மூன்று நேர உணவு, மற்றும் ஒவ்வொரு வருடமும் கோடைகால விடுமுறையில் நாடு சென்று திரும்ப இலவச விமான டிக்கெட் ஆகியனவற்றை உள்ளடக்கியிருக்கும். அத்துடன் ஒவ்வொரு வருடமும் நடாத்தப்படும் பரீட்சைகளில் ஒரு மாணவன் முதல் சித்தி பெறுகின்ற போது அவருக்கு ஊக்குவிப்புத் தொகையாக ஆயிரம் ரியால் (80000 இலங்கை ரூபாய்) வழங்கப்படுகிறது. இது கலைமானி (BA) பட்டப்படிப்பில் கற்கும் மாணவர்களுக்கான சலுகைகள், அதற்கு மேற்தரத்தில் கற்கும் மாணவர்களுக்கான சலுகைகள் இதைவிட உயர்ந்ததாக இருக்கும். 


நானும் இவ்வனைத்த சலுகைகளுடனும், ஐந்து வருடங்கள் அங்கு கற்றிருக்கின்றேன். அந்தப் பாக்கியத்தை தந்த அல்லாஹ்வுக்கு நன்றி கூறுவதுடன். அந்த சந்தர்ப்பத்தை தந்த சவூதி அரேபியாவின் அரசாங்கத்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். 


அத்துடன், இவ்வாறு உலக நாடுகள் அனைத்துக்கும் சேவைகளை அள்ளி வழங்குகின்ற சவுதி அரேபியா, நாளை (23/09/2024)  தனது 94 ஆவது தேசிய தினத்தை அடைகிறது. 


இச்சந்தர்ப்பத்தில், அல்லாஹ் அந்நாட்டிற்கும், அந்நாட்டில் ஆட்சியாளர்களுக்கும் குடிமக்களுக்கும் செல்வ செழிப்பையும், நிம்மதியான வாழ்க்கையும் பாதுகாப்பையும் சொரிய வேண்டும் என மனமார பிரார்த்திக்கின்றேன். 


கலாநிதி M. H. M. Azhar (PhD)

பணிப்பாளர்.

அல் இமாம் அப்துல் அஸீஸ் பின் பாஸ் பெண்கள் கல்லூரி - மல்வானை


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »