இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் மிகவும் பாதிக்கப்பட்ட நிர்மாணத்துறை இன்னும் மீளவில்லை என இலங்கை தேசிய நிர்மாண சங்கத்தின் தலைவர் டேரின்டன் போல் தெரிவித்தார்.
சுமார் 2000 முதல் 2500 வரையிலான சிறியளவிலான நிர்மாணத்துறையினர் தற்போது தமது தொழிலில் இருந்து விலகியுள்ள நிலையில், நாட்டின் 9 மாகாணங்களில் உள்ள 11 அலுவலகங்களின் ஊடாக, நிர்மாணத்துறையில் உள்ளவர்களுக்கு தெளிவினை பெற்றுக்கொடுத்து அவர்களை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
நாட்டில் சிறிய மற்றும் நடுத்தர நிர்மாணத்துறையினரே அதிகளவில் உள்ள நிலையில், நாட்டின் நிர்மாணதுறை சார்ந்த சட்டத்திட்டங்கள் தொடர்பில் அவர்களுக்கு போதிய தெளிவின்மையால் பல்வேறு விதிமீறல்கள் இடம்பெறவதுடன், இது தொடர்பில் தெளிவுப்படுத்தல்களை வழங்குவதற்காக நாடு முழுவதும், பல்வேறு செயமர்வுகளை இலங்கை தேசிய நிர்மாண சங்கம் முன்னெடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
நிர்மாணத்துறையில் உள்ளவர்களுக்கு தெளிவுப்படுத்தும் ஒரு நாள் செயலமர்வு பத்தரமுல்லையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிலையில், இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டில் வீழ்ச்சியடைந்துள்ள கட்டுமாணத்துறையை வலுப்படுத்த எந்த அரசாங்கமும் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. சிறந்த கட்டுமாணத்துறையை நாட்டில் உருவாக்க முடிந்தால், பொதுமக்களின் பணம் வீணாவதை தடுக்க முடியும்.
இருந்தாலும், எதிர்காலத்தில் நாட்டில் கட்டுமாணத்துறை மீண்டும் வளர்ச்சியடையும் போது, நாட்டில் சிறந்த கட்டுமாணத்துறையினர் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசாங்கத்தின் உதவிகள் கிடைக்காவிட்டாலும், சில நிறுவனங்களின் அனுசரணையுடன் இவ்வாறான தெளிவுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நாட்டின் பொருளாதாரத்துக்கு சுமார் 10 வீத பங்களிப்பினை வழங்கிய இந்த நிர்மாணத்துறையில் சிறந்த தொழில்நுட்பங்களை கொண்ட நிறுவனங்கள் உள்ளன. சீனா மற்றும் இந்தியாவில் இருந்து நாட்டுக்கு கட்டுமாண நிறுவனங்கள் வருவதை போன்று, இலங்கையில் உள்ள நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு சென்று கட்டுமாணங்களை மேற்கொள்ளும் திறன் உள்ளபோதும், அதற்கு அரசின் அனுசரணை கிடைக்காமை தடையாக உள்ளது.
2022ஆம் ஆண்டு முதல் நிர்மாணத்துறை வீழ்ச்சியடைந்த நிலையில், வெளிநாட்டு நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட பல்வேறு கட்டுமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அதனை ஆரம்பிக்க இதுவரை வேலைத்திட்டங்கள் உருவாக்கப்படவில்லை. 2024ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக, நிறுத்தப்பட்ட கட்டுமானங்களை மீள ஆரம்பிக்க 50 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்ட போதும், அது செயற்படுத்தப்படுவதாக தெரியவில்லை.
நாட்டுக்கு தேவையற்ற நிர்மாணங்களை மேற்கொள்வதால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் விழ்ச்சியடையும் எனவே அதனை விடுத்து, நாட்டுக்கு தேயைான கட்டுமானங்களை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெளிநாட்டு நிறுவனங்கள் இலங்கைக்கு வரும்போது அவர்களுடன் சிறியளவிலான நிர்மாணத்துறையினர் மற்றும் தொழிலாளர்கள் நாட்டுக்கு வருகின்றனர். இதனால் உள்ளாட்டு தொழிலாளர்கள் மற்றும் நிர்மாணத்துறையினர் பாதிக்கப்படுகின்றனர். எனவே தெளிவான திட்டமிடல்கள் இருந்தால் கட்டுமாணத்துக்காக வெளிநாட்டு நிறுவனங்களை நம்பியிருப்பதை நிறுத்த முடியும். அத்துடன் உள்நாட்டு கட்டுமாணத்துறையை வளர்ச்சியடை செய்யவும் முடியும்” என்றார்.
-ஜே.ஏ.ஜோர்ஜ்