தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் ஊழல் ஒழிக்கப்படும் என போலியான வாக்குறுதிகளை வழங்கி வருவதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை கிண்ணியா நகர சபை மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது வலுவான ஊழல் ஒழிப்பு சட்டங்கள் உள்ளன. இதன் மூலம் இலஞ்சம் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில்தான் முன்னாள் அமைச்சர் பௌசி போன்றோர் அண்மையில் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டனர்.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தன்னிடம் 400 பேரின் ஊழல் தொடர்பான ஆதாரங்கள் உள்ளதாகக் கூறிவருகிறார். அவ்வாறாயின் ஏன் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் இது தொடர்பாக முறைப்பாடு எதுவும் மேற்கொள்ளவில்லை எனக் கேட்க விரும்புகின்றேன்.
தற்போது தகவல் பல தன்னிடம் இருப்பதாகக் கூறும் அவர் அதுகுறித்து நடவடிக்கை எதுவும் எடுக்காது அதிகாரம் கிடைத்த பின் நடவடிக்கை எடுப்பேன் எனக் குறிப்பிடுவது வேடிக்கையான விடயம்.
எனவே அனுரகுமார திஸாநாயக்க அதிகாரம் கிடைத்தால் கூட ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளமாட்டார் என்பதையே இது எடுத்துக்காட்டுகின்றது.
இந்நாட்டில் ஊழல் ஒழிய வேண்டும் என்று அவர் விரும்புவாராயின் தன்னிடம் உள்ள சில ஆதாரங்களையாவது இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்.
இதனை விடுத்து மக்களை ஏமாற்றுவதற்காக வெறுமனே மேடைகளில் வாக்குறுதி வழங்குவதில் எந்த பலனும் இல்லை என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
Wednesday, September 18, 2024
தேசிய மக்கள் சக்தி போலியான வாக்குறுதிகளை வழங்குகிறது - இம்ரான் மஹ்ரூப்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »