எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை முறிவடையும் நிலையை எட்டியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த இரண்டு பிரதான நிபந்தனைகளே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
பொதுத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் அண்மையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
இதுவரையில் சுமார் எட்டு கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ள போதிலும், ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு பிரதான நிபந்தனைகள் காரணமாக, கலந்துரையாடல்களை முன்னெடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உட்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய மக்கள் சக்தி, தொலைபேசி சின்னத்தில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றும், முன்னாள் ஜனாதிபதி, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க புதிய கூட்டணியில் இருக்கக் கூடாது என்றும் அந்த நிபந்தனைகள் என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க பெற்ற பெரும்பான்மையான வாக்குகள் அவரது தனிப்பட்ட வாக்குகளாகக் கருதப்படுவதால் அவர் இல்லாத அரசியல் கூட்டணிக்கு உடன்பட முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள் கருதுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள மற்றுமொரு நிபந்தனை என்னவென்றால், புதிய கூட்டணியின் தலைமைப் பொறுப்பு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதாகும்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளும் இந்த யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு இரு தரப்புக்கும் இடையிலான கூட்டணி தொடர்பிலான பேச்சுக்களை தொடர முடியாத பின்னணி உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Monday, September 30, 2024
UNPக்கும், SJBக்கும் இடையில் இழுபறி நிலை!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »