Our Feeds


Saturday, December 7, 2024

SHAHNI RAMEES

கொரியாவுக்கு தொழிலுக்கு அனுப்பும் ஈ8 விசா சட்ட ரீதியிலானது அல்ல - அமைச்சர் விஜித்த ஹேரத்

 


கொரியாவுக்கு தற்காலிகமாக தொழிலுக்கு

அனுப்பும் ஈ8 விசா எந்தவகையிலும் சட்ட ரீதியிலானது அல்ல. அது தொடர்பான ஒப்பந்தத்துக்கு அமைச்சரவையின் அனுமதியும் பெற்றுக்கொள்ளப்படவில்லை என அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (7) அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வாக்குப்பதிவு கணக்கறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகாெண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.


அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,


ஈ8 விசா என்பது தென்கொரியாவுக்கு விவசாயம் மற்றும் கடற்றொழிலுக்காக தற்காலிகமாக இலங்கையர்களை அனுப்புவதற்கான ஒப்பந்தம். அந்த ஒப்பந்தம் எந்தவகையிலும் சட்ட ரீதியிலான ஒப்பந்தம் அல்ல. இலங்கை தென்கொரிவுடன் அல்லது வேறு நாட்டுடன் வெளிநாட்டு தொழில் தொடர்பில் ஒப்பந்தம் கைச்சாத்திடுவதென்றால் இலங்கையில் எமது அமைச்சரவையில் அதற்கு பூரண அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும். என்றாலும் முன்னாள் தொழில் அமைச்சர் கொரியாவின் ஒரு மாநிலத்துடன் தனிப்பட்ட முறையில் ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளார். அதன் பிரதி ஒன்றுகூட வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இல்லை.


ஆனால் அந்த ஒப்பந்தம் தனியார் முகவர் நிறுவனங்களிம் இருக்கின்றன.ஆனால் அது எந்தவகையிலும் சட்ட பூர்வமானதல்ல. ஆனால் பொறுப்புவாய்ந்த அமைச்சர் என்றவகையில், கைச்சாத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமைச்சரவைக்கு சமர்ப்பித்து அனுமதியை பெற்றுக்கொண்டு, வெளிவிகார அமைச்சில் அனுமதியை பெற்றுக்கொண்டு, கொரியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருக்கலாம். அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை. 


இதனால் அப்பாவி இளைஞர் யுவதிகள் இதன் உண்மைத்தன்மை தெரியாமல் வெளிநாட்டு முகவர் நிறுவனங்களில் பதிவு செய்து கொரியாவுக்கு செல்ல விண்ணப்பித்திருந்தனர். அதற்கு கொரி தூதரகத்தினால் விசா வழங்கி இருந்தது. கொரிவுக்கு இதில் எந்த பிரச்சினை இல்லை.


ஏனெனில் அவர்களின் சட்டத்துக்கமைய மாநிலம் ஒன்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ள முடியும். எமது நாட்டின் சட்டத்தின் பிரகாரம் அவ்வாறு முடியாது. மாகாணசபைக்கு அவ்வாறு தனியான ஒப்பந்தம் கைச்சாத்திட முடியாது. மத்திய அரசாங்கத்துக்கே அந்த அதிகாரம் இருக்கிறது. அதனால் இந்த சட்டத்துக்கு முரணான ஈ8 விசாவினால் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


அதனால் இந்த முறைமையை நாங்கள் சட்ட ரீதியிலாக்குவதற்கு நடவடிக்கை எடுப்போம் என்பதை மக்களுக்கு தெரிவிக்கிறோம். ஈ8 விசாவை சட்ட ரீதியிலாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை தற்போது நாங்கள் மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »