Our Feeds


Friday, December 13, 2024

Sri Lanka

விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல்லை கொள்வனவு செய்ய நடவடிக்கை!


2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தேசிய உற்பத்தியை மேம்படுத்த விவசாயத்துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்படும். அடுத்த ஆண்டு முதல் அரச கட்டமைப்பின் ஊடாக நெல்லை கொள்வனவு செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

காலி பகுதியில்  நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர்  மேலும் தெரிவித்ததாவது,

சந்தையில் நிலவும் அரிசி மற்றும் தேங்காய் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு முதல் அரச கட்டமைப்பின் ஊடாக விவசாயிகளிடமிருந்து நெல் அதிகளவில் கொள்வனவு செய்யப்பட்டு அரச அரிசி உற்பத்தி ஆலைகளில் களஞ்சியப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சிறு மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். பிரதான அரிசி உற்பத்தியாளர்களிடம் அடிபணிய வேண்டிய தேவை. பெரும்போக விவசாயத்துக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களையும் பெற்றுக் கொடுப்போம்.

அரசுக்கு சொந்தமான சிலாபம் மற்றும் குருநாகல் தெங்கு தோட்டங்களுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக உரம் விநியோகிக்கப்படவில்லை. முறையான பராமரிப்புக்கள் இல்லாமல் எவ்வாறு அதிக விளைச்சலை எதிர்பார்க்க முடியும். கடந்த அரசாங்கத்தின் தவறான நிர்வாகத்தினால் தேசிய உற்பத்திகள் பாதிக்கப்பட்டன.

அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு உரிய நடடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 55 ஆயிரம் மெற்றிக்தொன் உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 27.50 மெற்றிக் தொன் உரத்தை தெங்கு பயிர்ச்செய்கைக்கு வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். அத்துடன் 5 ஏக்கர் நிலப்பரப்பினை கொண்ட பதிவு செய்யப்பட்ட சிறு தெங்கு தோட்ட உற்பத்தியாளர்களுக்கு மானிய அடிப்படையில் உரம் விநியோகிக்கப்படும்.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தேசிய உற்பத்தியை மேம்படுத்த விவசாயத்துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்படும். தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததன் பின்னர் குரங்குகளின் இனப்பெருக்கம் அதிகரிக்கப்பட்டு பயிர்ச்செய்கைகள் நாசமடைந்துள்ளதை போல் எதிர்தரப்பினர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். காட்டு விலங்குகளினால் பயிர்ச்செய்கைக்கு ஏற்படும் பாதிப்பை தடுப்பதற்கு தொழில்நுட்ப ரீதியில் தீர்வு முன்வைக்கப்படும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »