கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுவின் தலைவரான மிதிகம ருவன் என்ற நபருக்கு கைவிலங்கு சாவியை இரகசியமாக வழங்க வந்த நபர் சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
புதிய மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விசேட பிரிவின் சந்தேகநபரான மிதிகம ருவன் என்ற குற்றவாளியைப் பார்ப்பதற்காக கடந்த 12ஆம் திகதி மாலை சுமார் 3.30 மணியளவில் பார்வையாளர்கள் பகுதிக்கு தம்பதியொன்று வருகைத் தந்திருந்தனர்.
அவர்களில் ஒருவர் மீது சந்தேகத்தின் அடிப்படையில், சிறைச்சாலை அவசரகால தந்திரோபாயப் படை அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டது. அதன்போது, அவரது பணப்பையில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைவிலங்கு சாவி கண்டுபிடிக்கப்பட்டது.
இவருடன் வந்த பெண்ணுக்கு மிதிகம ருவனுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததும் தெரியவந்துள்ளது. இதன்படி, கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பொரளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணையின் போது, தான் சில காலம் பொலிஸ் அதிகாரியாக கடமையாற்றியதாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.