Our Feeds


Friday, December 13, 2024

SHAHNI RAMEES

அரிசித் தட்டுப்பாடு விரைவில் நீங்கும்!



‘‘அரிசி இறக்குமதிக்கான வரையறைகளை எதிர்வரும்

20ஆம் திகதிவரை நீக்கியுள்ளோம். அதற்காக இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான 65 ரூபா வரியை நீக்க முடியாது. எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் சந்தையில் ஏற்பட்டுள்ள அரிசி நெருக்கடிக்குத் தீர்வு கிடைக்கும். அதற்கமைய, மீண்டும் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்க மாட்டோம்’’ என்று வர்த்தக, வாணிப உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.


கொழும்பில் நேற்று (12) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.


இதுதொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,


‘‘விவசாயத்தையும் நுகர்வோரையும் பாதுகாத்துக்கொண்டு அரிசி பிரச்சினைக்கு தீர்வைக் காண பல்வேறு தீர்மானங்களை எடுத்தோம். நாட்டில் போதுமானளவு அரிசி உற்பத்தி இருப்பதாகவே கடந்த காலங்களில் விவசாயத் திணைக்களம், நெல் கொள்முதல் சபை, நுகர்வோர் அதிகார சபையிடமிருந்து கிடைத்த தரவுகளில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த சகல தரவுகளையும் பரிசீலித்தால் மேலதிக நெல் உற்பத்தி நாட்டில் இருக்கிறது. ஆனால் சந்தையில் நெல்லுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அரிசி ஆலை உரிமையாளர்களை அழைத்து அரிசியை சந்தைக்கு விடுவிக்குமாறு கூறினோம்.


அதிக இலாபத்தை உழைக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் கூறினோம். கட்டுப்பாட்டு விலையின் அடிப்படையில் அரிசியை சந்தைக்கு விநியோகித்து வருகிறார்கள். அதேபோன்று, அரிசி ஆலை உரிமையாளர்களுடன் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டுக்கமைய சதொசவுக்கு நாளாந்தம் 300 மெற்றிக் தொன் அரிசி விநியோகிக்கப்படுகிறது. அதற்கு மேலதிகமாக 10 மெற்றிக் தொன் அரிசி பிரதான அரிசி ஆலை உரிமையாளர்களினூடாக சந்தைக்கு விநியோகிக்கப்படுகிறது.


மேலும், எதிர்வரும் 20ஆம் திகதிவரை அரிசி இறக்குமதிக்கான வரையறையை நீக்கியுள்ளோம். அதற்கமைய, நாட்டுக்கு அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. துறைமுகத்தில் அரிசி இருப்பில் இருக்கிறது. நேற்றிலிருந்து (நேற்று முன்தினம்) துறைமுகத்திலிருந்து அரிசியை விடுவிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 25,000 – 50,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாகவே, 70,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டது. அதில் 5,200 மெற்றிக் தொன் அரிசியை விலைமனுக் கோரல் மூலம் நாட்டுக்கு கொண்டுவர தீர்மானித்தோம்.


15 – 20ஆம் திகதிக்கு இடையில் ஒருதொகை அரிசியும் 20 – 24ஆம் திகதிக்கு இடையில் ஒருதொகை அரிசியும் கிடைக்கும். இரண்டாவது தொகைக்கான விலைமனுக்கோரலும் இடம்பெற்றுள்ளது. 260 ரூபாவுக்கு அரிசி விற்பனை செய்யப்பட்டபோது நெல் மூடையின் விலை 9,000 – 9,500 ரூபாவாக இருந்தது. இருப்பினும் அரிசி விலையை அதிகரிக்க நாங்கள் இடமளிக்கவில்லை.


அதேபோன்று இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு 65 ரூபா வரி அறவிடப்படுகிறது. அந்த வரியை நீக்குமாறு இறக்குமதியாளர்கள் கோரினார்கள். அதற்கும் இடமளிக்கவில்லை. விவசாயிகளின் பாதுகாப்புக் கருதியே இறக்குமதி அரிசிக்கு 65 ரூபா வரி அறவிடப்படுகிறது. அதன் காரணமாகவே, 260 ரூபாவுக்கு விற்பனையான ஒரு கிலோ நாட்டரிசிக்கான விலையை 230 ரூபா என்ற அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்திருக்கிறோம். அந்த சில்லறை விலையிலேயே அரிசி சந்தைக்கு விநியோகிக்கப்படுகிறது.


இன்னும் ஒன்றரை மாதங்களில் நெல் அறுக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். அதன் பின்னர் அந்த அரிசி சந்தைக்கு வர இரு மாதங்களாவது ஆகும். அதுவரையில் பாவனைக்கு போதியளவு அரிசி இன்மையின் காரணமாகவே அதற்கு பொருத்தமான தொகையில் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் சந்தையில் ஏற்பட்டுள்ள அரிசி நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். மீண்டும் அரிசி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்க மாட்டோம். மீண்டும் இந்த நிலைமை ஏற்படுவதற்கு இடமளிக்க மாட்டோம்’’ என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »