Our Feeds


Wednesday, December 25, 2024

Sri Lanka

நிதி பெற்றுக்கொண்டதை தயாசிறி ஏற்க வேண்டும் - நளிந்த!

ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்றுக்கொண்டவர்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட பெயர்ப்பட்டியலிலுள்ள ஏனையவர்கள் ஒப்புக்கொண்டதை போன்று, பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவும் நிதி பெற்றுக்கொண்டதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாமல் மற்றையவர்கள் மீது சேறுபூசல் செய்யக் கூடாது என்று அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (24) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

‘‘2005ஆம் ஆண்டிலிருந்து 2024ஆம் ஆண்டுவரை ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதிப் பெற்றுக்கொண்ட ஒருசில அரசியல்வாதிகளின் பெயர்ப்பட்டியலை மாத்திரமே பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளேன். இன்னுமொரு பெயர்ப்பட்டியலும் என்னிடம் இருக்கிறது. மாகாண சபை உறுப்பினர்கள், ஆளுநர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் பெயர்களும் இருக்கின்றன.

2005ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெற்றவற்றையும் வெளியிடுவோம்.

ஜனாதிபதி செயலகத்தில் சகல ஆவணங்களையும் தேடிக் கண்டுபிடிப்பது இலகுவான விடயமாகும். தயாசிறியை தவிர்ந்த ஏனையவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்த நிதியை பெற்றுக்கொண்டதாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.

தயாசிறி மாத்திரமே வெவ்வேறு கருத்துகளை முன்வைத்து வருகிறார். சேற்றில் விழுந்த பன்றி வெளியில் வந்து நன்னீரில் சுத்தம் செய்து கொள்ள முயற்சிப்பதில்லை. தனது உடம்பிலுள்ள சேற்றை வேறு இடங்களில் பூசிவிட்டே செல்லும். அவ்வாறான பணிகளையே தற்போது முன்னெடுத்து வருகிறார்கள்.

ஜனாதிபதி நிதியத்தில் எவ்வளவு பணம் பெற்றார் அல்லது வேறு நிதியங்களில் பணம் பெற்றுக்கொண்டாரா, காப்புறுதி செய்தாரா? போன்ற விடயங்களை தயாசிறி வெளியிட வேண்டும். மாறாக எங்களை எச்சரிப்பதில் பயனில்லை. இதில் குழப்பமடையவேண்டிய அவசியமில்லை. ஏனையவர்களைபோன்று ஜனாதிபதி நிதியத்தில் பணம் பெற்றுக்கொண்டதை தயாசிறி ஒப்புக்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லை என்று மறுக்க வேண்டும்’’ என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »