Our Feeds


Friday, January 31, 2025

Sri Lanka

மக்களுக்கான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் - வசந்த சமரசிங்க!


அரச நிதியை மோசடி செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் போது அதனை அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிட்டுக் கொண்டு ஊழல்வாதிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய ஊழல்வாதிகளை சட்டத்தின் முன் முன்னிலைப்படுத்துவோம் என வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

அநுராதபுரம் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பெரும்போக விவசாய விளைச்சல் அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இம்முறை 2.9 மில்லியன் மெற்றிக் தொன் நெல் விளைச்சல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நெல்லுக்கான உத்தரவாத விலை இன்னும் ஓரிரு நாட்களில் நிர்ணயிக்கப்படும்.

விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல்லை கொள்வனவு செய்வதற்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. எதிர்வரும் சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் அரிசி உட்பட அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது.

சந்தையில் நிலவும் தேங்காய் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் குறித்து வர்த்தகம், உணவு பாதுகாப்பு, பெருந்தோட்டத்துறை மற்றும் கைத்தொழில் அமைச்சு ஆகிய மூன்று அமைச்சுக்களை ஒன்றிணைத்து விசேட நடவடிக்கை வகுக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு 3000 முதல் 3100 மில்லியன் தேங்காய்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. தேவையை காட்டிலும் கேள்வி அதிகமாக காணப்படுகிறது. ஆகவே தேங்காய் தட்டுப்பாட்டுக்கு தொழில்நுட்ப ரீதியில் தீர்வு முன்வைக்கப்படும்.

கடந்த காலங்களில் அரச நிதியை மோசடி செய்து அரச அதிகாரத்தில் தப்பித்துக் கொண்டவர்கள் தற்போது கலக்கமடைந்துள்ளார்கள். ஊழல் மோசடியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் போது அரசியல் பழிவாங்கள் என்று குறிப்பிட்டுக் கொண்டு ஊழல்வாதிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைய ஊழல்வாதிகளை சட்டத்தின் முன் முன்னிலைப்படுத்துவோம்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரச உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை ஏற்றுக் கொள்கிறோம் ஆனால் 30 ஆயிரத்துக்கும் அதிகமான சதுர அடி பரப்பிலான வீடு வழங்கப்பட வேண்டும் என்று சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மூன்று மகன்கள் உள்ளார்கள். மூத்த மகனான நாமல் ராஜபக்ஷவின் சொத்து மதிப்பு எவ்வளவு, இளைய மகன் பல கோடி ரூபா நிதி மோசடி செய்து கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். மஹிந்த ராஜபக்ஷவை அவர்களின் பிள்ளைகளால் பார்த்துக் கொள்ள முடியாவிடின் அவருக்கு வீடு வழங்குவது ஒன்றும் பிரச்சினைக்குரிய விடயமல்ல என்றார்.

(இராஜதுரை ஹஷான்)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »