Our Feeds


Friday, January 31, 2025

Sri Lanka

சட்ட விதிமுறைப்படியே கொள்கலன்கள் விடுவிப்பு - அமைச்சர் பிமல்!

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களும் சட்ட விதிமுறைகளுக்கு அமையவே விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாக கூறுபவர்கள் உரிய சாட்சியங்களுடன் அது தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியும். ஆனால் இந்த விடயத்தை அடிப்படையாகக் கொண்டு எதிர்கட்சியினர் மேல் மாகாண ஆளுநருக்கு எதிராக சேறு பூசும் நடவடிக்கையே முன்னெடுத்துள்ளனர் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் போது சஜித் பிரேமதாச தலைமையிலான அணியினர் அவர்களை பாதுகாக்க முற்படுகின்றனர். உண்மையில் சஜித் பிரேமதாச தற்போது யாருடன் கூட்டணி அமைத்துள்ளார் என்பதை மக்களுக்கு கூற வேண்டும். எமக்கு கிடைத்துள்ள மக்கள் ஆணையுடன் எவரும் விளையாட வேண்டாம் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

கொழும்பில் வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களும் சட்ட விதிமுறைகளுக்கு அமையவே விடுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த விடயம் தொடர்பில் சுங்கத்திணைக்களமும் தெளிவுப்படுத்தியுள்ளது.சுங்கத் திணைக்களத்தின் விசேட அதிகாரிகள் குழுவினால் இந்த கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னரும் இதுபோன்ற சம்பவங்கள் 5 தடவைகள் இடம்பெற்றுள்ளன.அவசர நிலைமை ஒன்றின் போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் அறிந்துள்ளார்கள். அதற்கேற்பவே அதிகாரிகள் தற்போதும் செயற்பட்டுள்ளார்கள்.

துறைமுகத்திற்குள் மோசடி இடம்பெறுவதாகவும் அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகமொன்று செய்தி வெளியிட்டு இருந்தது. அண்மையில் புகையிரத ஈ- பயணச்சீட்டில் மோசடி இடம்பெறுவதாக கூறப்பட்டது. தற்போது விசாரணைகள் இடம்பெறுகின்றன. சந்தேகபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விடயத்தில் தொடர்புடைய அனைவரையும் நாம் கைது செய்வோம். எவரையும் தப்பிச்செல்ல இடமளிக்கமாட்டோம்.

ராஜபக்ஷக்களை கைது செய்ய முற்படும் போது சஜித் தரப்பினர் முணங்கிக் கொண்டிருக்கிறார்கள். யோஷித்தவை கைது செய்யும் போது எதிர்க்கட்சியின் ஹர்ஷன ராஜகருணாவுக்கு கவலை ஏற்படுகிறது. இரண்டு பக்கத்திலும் உள்ள திருடர்கள் ஒன்றிணைந்துள்ளனர். இவர்கள் பெரிய திருடரை பாதுகாக்க ஒன்றிணைந்துள்ளனர்.

கடந்த 10 வருடங்களாக யோஷித்தவை பிரதிவாதியாக பெயரிடுவதற்கு முடியாமல் போனது. அதேபோன்று நாமலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியாமல் போயுள்ளது. 44 கோடி ரூபா பணத்தை பயன்படுத்தி வீட்டை திருத்தும் பணிகளை செய்துள்ளனர். இவ்வளவு பணம் செலவழித்து அவ்வாறு செய்ய முடியுமா? இவ்வாறான செயற்பாடுகள் காரணமாகவே இந்த நாடு வங்குரோத்து அடைந்தது.

குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் போது சஜித், நாமல், விமல் வீரவன்ச தரப்பு அவர்களை பாதுகாக்க முற்படுகிறார்கள். குறித்த 323 கொள்கலன்களை அடிப்படையாக கொண்டு இவர்கள் எம்மை திருடர்கள் எனக் கூறுகிறார்கள்.இங்கு மோசடி இடம் பெற்றிருந்தால் அது தொடர்பில் முறைப்பாடு செய்யுங்கள். இந்த விடயத்தை அடிப்படையாகக் கொண்டு மேல் மாகாண ஆளுநருக்கு எதிராக சேறுபூசும் நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டாம்.

இந்த கொள்கலன்களுக்கும் ஆளுநருக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அவருக்கு எதிராக உரிய ஆதாரங்களுடன் முறைப்பாடு பதிவு செய்யுமாறு சஜித் தரப்புக்கும் மொட்டுக்கட்சிக்கும் சவால் விடுக்கிறோம்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »