Our Feeds


Monday, February 3, 2025

Zameera

77வது சுதந்திர தின விழா நாளை




 77வது சுதந்திர தினத்தின் விழா நாளை (04) காலை, சுதந்திர சதுக்கம் மற்றும் சுதந்திர பிரதேசத்தை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளன.

நாளை பாதுகாப்புக்காக 1,000க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இன்று (03) காலை நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க, தெரிவித்தார்.

அதன்படி, அங்கு வருபவர்கள் பரிசோதிக்கப்பட்டு பின்னர் சுதந்திர தின விழாவிற்கு அனுப்பப்படுவார்கள் என்று கூறிய ஊடகப் பேச்சாளர், சுதந்திர தின விழாவில் ஏராளமானோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார்.

நாளை விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அனைத்து அழைப்பாளர்களும் காலை 7.00 மணிக்கு முன்னதாக உரிய இடங்களுக்கு சென்று தங்களது இருக்கைகளில் அமருமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக வீதிப் பாதுகாப்பு பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திக ஹப்புகொட தெரிவித்தார்.

இதற்கிடையில், சுதந்திர தின விழாவை காண வரும் பொதுமக்கள் பௌத்தலோக மாவத்தை வழியாக வந்து, பின்னர் ரூபவாஹினி வளாகத்திற்கு அருகில் சோதனை செய்யப்பட்டு ஆசனங்களுக்கு அனுப்பப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகம் இந்த ஆண்டு சுதந்திர தின விழாவை குறைந்த செலவில், பொதுமக்களுக்கு ஏற்படும் அழுத்தங்களை குறைத்து, அதிக பொது மக்களின் பங்கேற்புடன் நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்த ஆண்டு சுதந்திர தின விழாவிற்காக முப்படைக உறுப்பினர்களின் எண்ணிக்கை 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதுடன், அணிவகுப்புக்கு முப்படை கவச வாகனங்களைப் பயன்படுத்தாமல் இருப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »