Our Feeds


Monday, February 3, 2025

Sri Lanka

யுத்தத்தை முடித்ததற்காக மஹிந்தவை தோளில் சுமந்துக் கொண்டா இருக்க முடியும் - எரங்க குணசேகர!


யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார் என்பதற்காக மஹிந்த ராஜபக்ஷவை தோளில் சுமந்துக் கொண்டு இருக்க முடியாது. கௌரவம் என்பதொன்று இருக்குமாயின் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ அரச இல்லத்தில் இருந்து வெளியேற வேண்டும் என இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்தார்.

கொலன்னாவ பகுதியில் நேற்று (2) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாடு என்ற ரீதியில் பொருளாதார மட்டத்தில் மாத்திரம் வங்குரோத்து நிலையடையவில்லை. சமூக கட்டமைப்பிலும் வங்குரோத்து நிலையடைந்துள்ளோம். சிறந்த முன்னேற்றத்துக்காகவே கிளின் ஸ்ரீ லங்கா செயற்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சகல அமைச்சுகளுக்கும் கிளின் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்துக்காக நிதி ஒதுக்கப்படும். அத்துடன் மக்களுக்கும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிவாரணம வழங்கப்படும். சமூக கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு கட்டம் கட்டமாக தீர்வு பெற்றுக் கொடுப்போம்.

நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரச செலவுகள் இயலுமான வகையில் குறைக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பாதுகாப்பு உட்பட செலவுகள் குறைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் தான் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைக்கப்பட்டு, வழங்கப்பட்ட அரச இல்லங்களை மீளப்பெறுவதற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க, கோட்டபய ராஜபக்ஷ ஆகியோர் நாகரீகமான முறையில் அரச இல்லத்தில் இருந்து வெளியேறியுள்ளார்கள். ஆனால் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, சந்திரிக்கா பண்டாரநாயக்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இன்றும் அரச இல்லங்களில் தான் உள்ளார்கள்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை முடித்தார் என்பதற்காக அவரை தோளில் சுமந்துக்கொண்டு திரிய முடியாது. அவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளார்கள். தமது பெற்றோரை பிள்ளைகள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். மஹிந்த ராஜபக்ஷவை பார்த்துக் கொள்வதற்கு அவரது மூன்று பிள்ளைகளுக்கும் முடியாவிடின் அவருக்கும், அவரது பாரியாருக்கும் வீடு வழங்கலாம். ஆனால் அவரது மூன்று பிள்ளைகளையும் அரசாங்கத்தால் பராமரிக்க முடியாது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »