தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான
ஏ.எல்.எம். அதாஉல்லாவை முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொள்ளுமாறு – அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் அழைப்பு விடுத்தார்.முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு – அட்டாளைச்சேனையில் நேற்று (09) வரவேற்பளிக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழு ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு, அதன் தலைவர் எஸ்.எல்.ஏ. ஹலீம் தலைமையில் நடைபெற்றது.
மு.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரவேற்பளிக்கப்பட்ட மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம், இந்த அழைப்பை விடுத்தார்.
“முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மர்ஹும் ஜலால்தீன், மர்ஹும் ரிஸ்வி சின்னலெப்பை மற்றும் முன்னாள் அமைச்சர் மர்ஹும் முஸ்தபா உள்ளிட்ட பலரை – முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் மரணிப்பதற்கு முன்னர், முஸ்லிம் காங்கிரஸில் இணைத்தார். அதேபோன்று முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து நின்று அரசியல் செய்வோரை – முஸ்லிம் காங்கிரஸில் இணையுமாறு இந்தக் கட்சியின் நலனுக்காக நான் அழைக்கின்றேன்” என, மு.கா தலைவர் ஹக்கீம் கூறினார்.
தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அதாஉல்லாவை, அட்டாளைச்சேனையில் நடந்த கூட்டத்தில் ‘பக்கத்து ஊர் காரர்’ எனக் குறிப்பிட்ட ஹக்கீம், அவரையும் முஸ்லிம் காங்கிரஸில் இணையுமாறு அழைப்பு விடுத்தார்.
“முஸ்லிம் காங்கிரஸ் என்பது தாய் இயக்கம். இதனூடாகத்தான் எல்லோரும் அடையாளம் பெற்றனர். இந்த இயக்கத்தை இன்னும் பலப்படுத்த வேண்டும். எனவே, பக்கத்து ஊரில் இருக்கும் ஆட்கள் (அட்டாளைச்சேனைக்கு பக்கத்தில் அக்கரைப்பற்று அமைந்துள்ளது. அது – அதாஉல்லாவின் சொந்த ஊர்) எல்லோரும் முஸ்லிம் காங்கிரஸில் இணைய வேண்டும். சகோதரர் தவமும் அதற்காக முயற்சித்துப் பார்த்தார். ஆனால் அவர் (அதாஉல்லா) இடக்கு முடக்காக கதைத்தார்; இப்போது அதிகம் கதைக்கின்றார்” என, ரஊப் ஹக்கீம் மேலும் கூறினார்.