Our Feeds


Thursday, February 20, 2025

Sri Lanka

கணேமுல்ல சஞ்சீவ கொலை சந்தேகநபர் குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பு!


திட்டமிடப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காகக் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் அவரை 72 மணித்தியாலங்களுக்குத் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு நீதிமன்றில் அனுமதி கோரப்படவுள்ளதாகக் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இதேவேளை, புத்தளம் - பாலாவி பகுதியில் நேற்று மாலை கைதான குறித்த சந்தேகநபர் பல பெயர்களில் தம்மை அடையாளப்படுத்தியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக்க மனதுங்க தெரிவித்துள்ளார். 

குறித்த சந்தேகநபர் பெண்ணொருவருடன் இணைந்து இந்த குற்றத்தைப் புரிந்துள்ளதுடன் பல அடையாள அட்டைகளும் அவரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன. 

அத்துடன் சட்டத்தரணிகளுக்கான அடையாள அட்டை ஒன்றும் அவரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது. 

இந்த சந்தேகநபர் முதலில் தம்மை மொஹமட் அஸ்லம் ஷெரீப்டீன் என்ற பெயரில் அடையாளப்படுத்தியதுடன், பின்னர், சமிந்து டில்ஷான் பியுமங்க கந்தனஆராச்சி என்ற பெயரிலும் தன்னை அடையாளப்படுத்தியுள்ளார். 

அத்துடன், அவரிடம் காணப்பட்ட சட்டத்தரணி அடையாள அட்டையில் கொடிகாரகே கசுன் பிரபாத் நிசங்க என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தநிலையில், மேலதிக விசாரணைகளுக்கமைய, அவரது உண்மையான அடையாளம், அவரின் முந்தைய குற்றங்கள் தொடர்பில் கண்டறிவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக்க மனதுங்க தெரிவித்துள்ளார். 

இதேவேளை, குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின்னர் அனைத்து காவல்நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டதுடன், சந்தேகநபர் கடல் மார்க்கமாகத் தப்பிச் செல்லக்கூடும் என்பதால் வீதித் தடைகளும் ஏற்படுத்தப்பட்டு சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. 

இந்தநிலையில், புலனாய்வு பிரிவினரால் வழங்கப்பட்ட தகலுக்கமைய, புத்தளம் பாலாவி பகுதியில் வேன் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் அவர் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக்க மனதுங்க தெரிவித்துள்ளார். 

அதேநேரம், குறித்த சந்தேகநபர், அண்மையில் கல்கிஸ்ஸை – வட்டரப்பல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

இதேவேளை, நேற்றைய தினம் புதுக்கடை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்துக்காகத் துப்பாக்கியைக் கொண்டு வந்த பெண்ணை கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்கின்றன. 

நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 25 வயதான இஷாரா செவ்வந்தி என்ற பெண்ணே நேற்றைய தினம் நீதிமன்றுக்குத் துப்பாக்கியைக் கொண்டு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது. 

குறித்த பெண்ணும் சட்டத்தரணி போன்று வேடமணிந்து சென்றிருந்தமை தெரியவந்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »