இன்னும் பழைய முறைமையில் கோப்புகளை நிரப்பிக்கொண்டு பாரிய கட்டிடங்களை அமைத்து அரச அலுவலகங்களில் வரிசையில் நின்று தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் யுகத்தை நிறைவுக்கொண்டு வரவேண்டும். அதற்கான டிஜிட்டல் மயப்படுத்த வேண்டிய திட்டங்களை நாம் வகுத்துள்ளோம். உலக நாடுகள் இந்த நடைமுறைகளை பல வருடங்களுக்கு முன்னதாக நடைமுறைப்படுத்தியுள்ளன. ஆனால் எமது ஆட்சியாளர்கள் அதனை செய்ய தவறி விட்டார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
குருநாகலில் சனிக்கிழமை (1) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி,
சர்வதேசத்தின் ஆதரவு இல்லாமல் போகும் என ஒருசிலர் கூறினர்.ஆனால் நாம் அதனை வலுப்படுத்தி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்கிறோம்.ஜப்பான் அரசாங்கத்துடன் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட உள்ளோம்.ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறோம்.உலக வங்கியுடன் கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தினோம்.வரலாற்றில் முதல் தடவையாக உலக வங்கி அதிக கடனை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.நாம் அந்த தொடர்புகளை வலுப்படுத்தியுள்ளோம்.
எமக்கு சவால்கள் உள்ளன.ஒன்று பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும்.அடுத்தது நிதி சந்தை தொடர்பான ஸ்திரமான நம்பிக்கை ஏற்படுத்த வேண்டியுள்ளது.மூன்றாவதாக சர்வதேச தொடர்புகளை வலுப்படுத்த வேண்டும். அதனை நாம் செய்துள்ளோம்.பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்கு கொண்டு மக்களை கவனிக்க வேண்டிய பொறுப்பு சவால் உள்ளது.எமது வரவு செலவுத்திட்டத்தை இதுவரை நாம் சமர்ப்பிக்கவில்லை.எதிர்வரும் 17 ஆம் திகதி மக்களை பாதுகாப்பதற்காக நிவாரணங்களை அறிவிக்க உள்ளோம்.
அஸ்வெசும கட்டமைப்பை மீள உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.பட்டதாரிகள் பலர் தொழில் இன்றி உள்ளனர்.தொகுதி தொகுதியாக இளஞர்களை இணைத்துக்கொண்டு அலுவலகங்களை நிரப்ப போவதில்லை. 30 ஆயிரம் வெற்றிடங்களை அடையாளம் கண்டுள்ளோம்.இந்த வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக அதற்கான நடவடிக்கை எடுப்போம்.எமது நாட்டை டிஜிட்டல் மயப்படுத்தவும் தீர்மானித்துள்ளோம்.
இன்னும் பழைய முறைமையில் கோப்புகளை நிரப்பிக்கொண்டு பாரிய கட்டிடங்களை அமைத்துக்கொண்டு அரச அலுவலகங்களில் வரிசையில் நின்று தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் யுகத்தை நிறைவு கொண்டு வருவோம். இதற்கான டிஜிட்டல் மயப்படுத்த வேண்டிய திட்டங்களை வகுத்துள்ளோம். அதற்கான மூன்று கட்ட நடவடிக்கைளை ஆரம்பித்துள்ளோம்.
ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதியை பெற்று கொள்ள வேண்டுமானால் சம்பந்தப்பட்ட கோப்புகளுடன் கொழும்புக்கு வருகை தர வேண்டும்.ஆனால் நாம் அதற்காக ஒவ்வொரு பிரதேசங்களிலும் கணிணி கட்டமைப்பை உருவாக்குவோம்.அந்த கட்டமைப்புக்கு சென்று தகவல்களை உள்ளடக்க முடியும்.ஜனாதிபதி செயலகம் அது தொடர்பில் ஆராயும்.ஏதேனும் மேலதிக ஆவணங்கள் தேவைப்பட்டால் அதனை அறிவிக்கும்.அந்த விண்ணப்பம் அனுமதிக்கப்பட்டால் அனுமதிக்கப்பட்டதாக அறிவிக்கும்.உரிய வங்கிக்கணக்கு பணம் வைப்பு செய்யப்படும்.
ஜனாதிபதி செயலகத்துக்கு வரவேண்டிய தேவை கிடையாது.அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை கைத்தொலைபேசி மூலமாகவே செலுத்த முடியும்.தபால் நிலையங்கள் வங்கிகளுக்கு செல்ல வேண்டிய தேவை கிடையாது.பொலிஸார் விதிக்கும் தண்டப்பணம் அவ்வாறே செலுத்த முடியும்.உலக நாடுகள் இந்த நடைமுறைகளை பல வருடங்களுக்கு முன்னதாக நடைமுறைப்படுத்தியுள்ளன.ஆனால் எமது ஆட்சியாளர்கள் அதனை செய்ய தவறி விட்டார்கள்.
வெளிநாட்டில் உள்ள ஒருவர் தமக்கு தேவையான பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் மரண சான்றிதழ் தேவைப்பட்டால் அதனை பெற்றுக்கொள்ள முடியாத நிலை உள்ளது.தூதரகத்துக்கு சென்று விமானத்தில் பொதியை அனுப்பி அதனை இங்கு பெற்று மீண்டும் அதனை அங்கு அனுப்ப வேண்டும்.அனைத்தையும் சம்பந்தப்பட்ட தூதரகத்திலேயே பெற்றுக் கொள்வதற்கு நாம் டிஜிட்டல் மயப்படுத்துவோம்.இந்த பெப்ரவரி மாத்திலிருந்து அதற்கான பணிகள் ஆரம்பமாகும்.
டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்க உள்ளோம். தரவுகள் திருடப்படும் எனக் கூறுகிறார்கள். மக்களுடைய தரவுகள் தொலைபேசியில் உள்ளன. இன்னும் அந்த பழைய கதைகளே கூறிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த வேலைத் திட்டத்தை மேற்கொள்ள இந்திய அரசாங்கம் 1000 கோடி ரூபா நிதியை வழங்குவதற்கு உள்ளது என்றார்.
(எம்.வை.எம்.சியாம்)