Our Feeds


Thursday, February 13, 2025

Zameera

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் எதிர்காலச் செயற்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் எதிர்காலச் செயற்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடும் கூட்டம் பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய மற்றும் ஒன்றியத்தின் தலைவர் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஆகியோரின் தலைமையில் 07ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

 

மாகாண மட்டத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 25% ஆக வரும் வகையில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஒன்றியத்தில் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, எதிர்வரும் தேர்தலில் அந்த முன்மொழிவை செயற்படுத்தும் வகையில் தற்பொழுது காணப்படும் சட்டத்தில் தேவையான திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான அவசியம் தொடர்பில் ஒன்றியத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

 

அத்துடன், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களை நியமிப்பது தொடர்பிலும் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பிலும் கோரிக்கை விடுப்பதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் கட்சிகளின் செயலாளர்களை சந்திப்பதற்கும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் தீர்மானித்தது.

 

பணியிடங்களில் பாலியல் வன்முறையை ஒழித்தல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை (SGBV) இல்லாமல் செய்வது போன்ற விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

 

அத்துடன், மார்ச் 8ஆம் திகதி இடம்பெறும் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் திட்டங்கள் தொடர்பிலும் ஒன்றியத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

 

இக்கூட்டத்தில் ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் சமன்மலீ குணசிங்ஹ, பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி சாகரிகா அதாவுத, கலாநிதி கெளஷல்யா ஆரியரத்ன, ஒஷானி உமங்கா, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, எம்.ஏ.சீ.எஸ். சத்துரி கங்கானி, நிலூஷா லக்மாலி கமகே, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, ஏ.எம்.எம்.எம். ரத்வத்தே, தீப்தி வாசலகே, சட்டத்தரணி ஹிருனி விஜேசிங்ஹ, அம்பிகா சாமிவெல் மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »