Our Feeds


Wednesday, February 26, 2025

Sri Lanka

வறட்சியால் நீர் விநியோகம் பாதிப்பு!


தொடர்ந்து நிலவும் வறட்சியான வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் நீர் விநியோகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, மாத்தறை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் நீர் விநியோகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

வறட்சியான வானிலையால் நீர் ஆதாரங்களில் நீர் மட்டம் வேகமாகக் குறைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய நாட்களில் நீர் நுகர்வு அதிகரித்துள்ளதுடன், நீர் விநியோகம் குறைவாக இருப்பதால், வாகனங்களை கழுவுதல், தோட்டக்கலை போன்ற நடவடிக்கைகளுக்கு நீர் பயன்பாட்டைக் குறைத்து, சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, பொதுமக்களிடம் கோரியுள்ளது.

நீர் விநியோகம் தடைபட்டுள்ள பகுதிகளில் உள்ள சில நுகர்வோருக்கு பவுசர் மூலம் தண்ணீரை வழங்குவதற்கான பணிகளை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தற்போது மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், வறட்சியான வானிலையுடன் மின்சார உற்பத்தி செலவும் அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, அனல் மின் நிலையங்கள் மற்றும் எரிபொருள் மின் நிலையங்களை அதிகமாக இயக்க வேண்டியுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்தார்.

அதிகபட்சமாக 900 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் களனி திஸ்ஸ ''நெப்தா'' மின் உற்பத்தி நிலையம் மற்றும் சப்புகஸ்கந்த எரிபொருள் மின் உற்பத்தி நிலையம் ஆகியவையும் இயக்கப்பட்டுள்ளன.

மொத்த மின்சார உற்பத்தியில் பகலில் 20 சதவீதமும் இரவில் 40 சதவீதமும் நீர் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து பெறப்படுவதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தம்மிக விமலரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

பகல் நேரத்தில் சூரிய மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து அதிக மின்சாரம் உற்பத்தி செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »