பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படாததன் காரணமாகவே ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எவ்வாறிருப்பினும் விரைவில் தேசிய பாதுகாப்பு தொடர்பான புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும். அதற்கான விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
செவ்வாய்கிழமை (25) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எமது விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் நாட்டிலுள்ள சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கே முக்கியத்துவமளிக்கப்பட வேண்டும். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் சந்தேகநபர்கள் தொடர்பில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனில் அதனை தவிர்க்க முடியாது.
மாறாக இந்த சட்டம் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக புதிய சட்டமொன்று நிறைவேற்றப்பட்ட பின்னரும் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் அதன் பிரதிபலன் இவ்வாறிருக்காது. எனவே நடைமுறையிலுள்ள சட்டத்துக்கமையவ நாம் செயற்படுவோம். எவ்வாறிருப்பினும் விரைவில் தேசிய பாதுகாப்பு தொடர்பான புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
அதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று நிகழ்நிலை காப்பு சட்ட மூலம் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்துக்கு பதிலாக வேறு சட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ள போதிலும், இன்னும் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது தொடர்பில் விசேட குழுவொன்றை நியமித்து நிகழ்நிலை காப்பு சட்டத்தை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இதனுடன் தொடர்புடையவர்களது நிலைப்பாடுகளும் கோரப்பட்டுள்ளன. காரணம் இந்த சட்டத்தை இரத்து செய்து அதற்கான இடத்தை வெற்றிடமாக்க முடியாது. இணைய பாவனையாளர்களுக்கான சட்டமொன்று அவசியமாகும். புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் வரை பழைய சட்டங்கள் நடைமுறையிலிருக்கும் என்றார்.
(எம்.மனோசித்ரா)
Wednesday, February 26, 2025
தேசிய பாதுகாப்பு தொடர்பில் விரைவில் புதிய சட்டம் - அரசாங்கம்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »