Our Feeds


Thursday, February 27, 2025

Zameera

அரசியல் தலைவர்களின் அரசியல் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட வேண்டும்


எந்தவொரு அரசியலமைப்பு மறுசீரமைப்பையும் மேற்கொள்வதற்கு முன்னதாக நாட்டின் அரசியல் சூழ்நிலையிலும் தலைவர்களின் அரசியல் அணுகுமுறையிலும் மாற்றம் ஏற்பட வேண்டுமெனவும், அன்றேல் அதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்ள முடியாதெனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தினால் செவ்வாய்க்கிழமை (25) மாலை கொழும்பு ஜானகி ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார். அவர் மேலும் கூறியதாவது,

அரசியல் கட்சிகள் பொறுப்பற்றவையாகவும், தேசிய நலன்கள் தொடர்பில் சிந்திக்காதவையாகவும்,அடுத்த தேர்தலில் என்ன செய்யலாம்? வெல்வோமா, தோற்போமா என  சிந்திப்பவையாகவும் இருக்கும் தற்போதைய சூழ்நிலையில் நாம் இதனை எவ்வாறு செய்யப்போகிறோம்? முன்னைய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட சிறந்த செயற்திட்டமொன்று இடைநிறுத்தப்பட்டாலும் அவர்கள் வருந்தப்போவதில்லை.

இலங்கையை பொறுத்தமட்டில் முதலாவதாக அரசியல் நெறிமுறைகள் மாற்றமடைய வேண்டும்.அரகயல அதில் மாற்றத்தை ஏற்படுத்தியது. ஆரகலயவின் ஊடாக வெளிப்படுத்தப்பட்ட மிக வலுவான செய்தியை இன்னமும் பாரம்பரிய அரசியல் கட்சிகள் சரிவர புரிந்துணரவில்லை என்றே தெரிகிறது. அவர்களுக்கு அதனை செவிமெடுக்க வேண்டியதில்லை.அவர்களுக்கு அது புரியாது.

நாம் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு முன்னெடுத்த முயற்சிகள் யாவும் பாராளுமன்றத்துக்குள்ளிருந்து தூக்கியெறியப்பட்டன.எனவே வேறெதனையும் செய்வதற்கு முன்பதாக, ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பல அரசியலமைப்பு வரைபுகள் நிலுவையில் உள்ளன.அவற்றை ஒன்றிணைத்து, தற்கால சூழ்நிலைக்கு பொருத்தமானதொரு வரைபை தயாரிப்பது இலகுவானதாக இருக்கும். எந்தவொரு அரசியலமைப்பு மறுசீரமைப்பையும் மேற்கொள்வதற்கு முன்னதாக நாட்டின் அரசியல் சூழ்நிலையிலும் தலைவர்களின் அரசியல் அணுகுமுறையிலும் மாற்றம் ஏற்பட வேண்டும்.அன்றேல் அதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்ள முடியாது.

நாம் பாராளுமன்றத்தின் தன்மையை முழுமையாக மாற்றியமைக்க வேண்டும்.இப்போது பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்போரில் பெரும்பான்மையானோர் அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகளை நிராகரித்துள்ளனர்.இல்லாவிடின் அவர்களது கட்சி அதனை நிராகரித்துள்ளது.அவ்வாறிருக்கையில் தற்போது மாத்திரம் அவர்களால் இதனை எவ்வாறு செய்ய முடியும் என எனக்குத் தெரியவில்லை என்றார்.


 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »