கெஹெல்பத்தர பத்மேவின் பாடசாலை நண்பர் ஒருவரை இலக்கு வைத்து நேற்று (26) மினுவங்கொடை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமானது, கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வௌியிட்டனர்.
அதற்கமைய, கரந்தெனிய சுத்தா மற்றும் ஹீனடியன மஹேஷ் ஆகிய குற்றச் செயல்களில் ஈடுபடுவோரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
பாதாள உலகக்குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கடந்த 19 ஆம் திகதி புதுக்கடை இல 5 நீதவான் நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.
இந்தக் கொலை தொடர்பாக துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட பத்து பேர் கைது செய்யப்பட்டிருந்தாலும், துப்பாக்கியைக் கொண்டு வந்த முக்கிய சந்தேக நபரை இன்னும் பொலிஸாரால் கைது செய்ய முடியவில்லை.
இந்தப் பின்னணியில்தான் நேற்று (26) காலை மினுவங்கொடையில் போதைப்பொருள் கடத்தல்காரரான கெஹல்பத்தர பத்மேவின் பாடசாலை நண்பர் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபரின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருள் கடத்தலிலும் அவருக்கு தொடர்பு இருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.