உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு
இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் உள்ளிட்டவர்கள் பங்கேற்கவுள்ளனர்.இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோரை சந்தித்து கலந்துரையாட உள்ள பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் கொழும்பில் சந்திக்க உள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு முன்னர் நடைபெறவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது, ஏற்கனவே இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ள கூட்டத்திட்டங்களை செயல் வடிவில் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மேலும் இந்த விஜயத்தின் போது சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுமானத் திறப்பு விழாவிலும் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது சம்பூர் மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது. திருகோணமலை, சம்பூரில் சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான கூட்டு முயற்சி ஒப்பந்தத்தில் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இலங்கையும் இந்தியாவும் கைச்சாத்திட்டது.
இலங்கை மின்சார சபைக்கும் இந்திய தேசிய அனல் மின் கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்தானது. ஆனால் அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களை தொடர்ந்து இந்த திட்டம் மௌனிக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக தேர்தலுக்கு முன்னர் சம்பூரில் உத்தேசிக்கப்பட்ட மின் உற்பத்தி நிலையத்தை மக்கள் விடுதலை முன்னணி எதிர்த்து வந்தது. ஆனால் தற்போது நிலைமை சுமூகமாகியுள்ள நிலையிலேயே கடந்த வார அமைச்சரவை கூட்டத்தில் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் நாட்டில் பெரும் சர்ச்சைகளை தோற்வித்த சம்பூர் அனல் மின் நிலையத்திற்கு மாற்றீடாகவே இந்த சூரிய மின் உற்பத்தி திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த திட்டத்தின் முதற்கட்டம் மூலம் 50 மெகாவோட் சூரிய மின்சாரம் உற்பத்தி செய்யவும், இரண்டாவது கட்டத்தில் 70 மெகாவோட் சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை நிறுவுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார ரீதியிலான சாதகமான மாற்றங்கள் இலங்கை - இந்திய இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்புகளின் புதிய அத்தியாயங்களை தொடங்க வாய்ப்பளித்துள்ளது. பிராந்தியத்தில் மிக வேகமாக வளரும் இந்திய பொருளாதாரத்துடன் இணையும் கேந்திர நிலையமாக இலங்கையை அனைத்து வகையிலும் மாற்றியமைக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் சம்பூர் மின் நிலைய திட்டம், திருகோணமலை எரிபொருள் மற்றும் பொருளாதார வலயம், வலுசக்தி குழாய் திட்டம், மற்றும் வடக்கு தீவுகளின் சூரிய சக்தி திட்டம் உட்பட ஏற்கனவே இணக்கப்பாடுகள் எட்டப்பட்ட கூட்டுத்திட்டங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது செயல்வடிவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.