வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திர சிறப்பு குழு இன்று 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஜெனிவாவுக்கு விஜயம் செய்ய உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
இலங்கைக்கு எதிரான போர் குற்றச்சாட்டுகள் குறித்து விசேட அறிக்கையை இலங்கை தரப்பு சமர்பிக்க உள்ளதுடன், சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்க புதிய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பான நீண்ட தெளிவுப்படுத்தலை முன்வைக்கவும் இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் நாளை 24 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாக உள்ளது.
இதில் பங்கேற்பதற்காக ஜெனிவா செல்லும் இலங்கையின் உயர்மட்ட இராஜதந்திர சிறப்பு குழு, 28 ஆம் திகதி வரை ஐ.நா மனித உரிமைகள் அமர்வுகளில் கலந்துக்கொள்ள உள்ளது. அத்துடன் நட்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளை பிரத்தியேகமாக சந்தித்து இலங்கை தரப்பு கலந்துரையாட உள்ளது.
மனித உரிமை பேரவையின் அமர்வில் சமர்ப்பிக்கப்படும் எந்த தீர்மானத்தின் 51/1 நகல் வடிவையும் இலங்கை தொடர்ந்து எதிர்க்கவும், இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற போர் குற்றங்கள் குறித்து ஆதாரங்களை சேகரிக்கும் வெளிப்புற பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கும் தீர்மானத்தை நிராகரிக்கவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன் பிரகாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இறுதி அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தின் நகல் வடிவை நிராகரிப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி கூடிய அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இதேவேளை உள்நாட்டுப் பொறிமுறை மூலம் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை பிரச்சனைகளுக்கு தீர்வை காண்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக உறுதியளித்துள்ளது. ஆனால் ஜெனிவா தீர்மானத்தில் உள்ள பல விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறானதொரு நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகி உள்ளமையினால் இலங்கை தொடர்பான செயன்முறையை முன்னெடுத்துச் செல்வதில் பின்னடைவுகள் ஏற்படக்கூடும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் நிரந்தர உறுப்புரிமைகளை கொண்ட சர்வதேச அமைப்புகள் எச்சரித்துள்ளன.
இதேவேளை அமெரிக்கா விலகியமையை சுட்டிக்காட்டி, 51/1 நகல்வடிவையும், இலங்கைக்கு எதிராக 2014 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் வலுவிழக்க வைக்கும் கோரிக்கையை ஜெனிவாவில் முன்வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது குறித்து நட்பு நாடுகளான சீனா, ரஷ்யா, பாக்கிஸ்தான் மற்றும் கியூபா போன்ற நாடுகளின் ஆதரவையும் இலங்கை கோரியுள்ளது. எவ்வாறாயினும் இறுதிக்கட்ட போரில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற பாரதூரமான மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையிலான நேர்மையான அறிக்கையை ஜெனிவாவுக்கு பதிலளிப்பதாக மாத்திரம் அல்லாது எமது அரசாங்கத்தின் நிலைப்பாட்டை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்த முன்வைப்பதாக அரசாங்கம் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.