தோல்வியடைந்த சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் அரசாங்கத்துக்கு
எதிராக போலியான பிரசாரங்களை முன்னெடுத்துள்ளனர். இதற்காக நாம் ஒருபோதும் பின்வாங்க போவதில்லை.எமக்கு வழங்கப்பட்ட மக்களாணையின் நோக்கத்தை நாம் ஆழமாக புரிந்து கொண்டுள்ளோம் அதற்கேற்பவே நாம் செயற்படுவோம் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.தேசிய மக்கள் சக்தியின் கல்கமுவ மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,
நாம் அரசாங்கத்தை பொறுப்பேற்று 70 நாட்கள் கடந்துள்ளன. இந்த காலப்பகுதியில் நாம் என்ன செய்துள்ளோம். இந்த நாட்டு மக்களுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தங்களையும் நாம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளையும் அந்த மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றவும் நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதனை செய்ய வேண்டிய பொறுப்பும் கடமையும் எமக்குள்ளது. இதனை நாம் கட்டம் கட்டமாக நிறைவேற்றுவோம்.
ஏழ்மை நிலையில் இருந்து இந்த மக்களை மீட்க வேண்டும். அவர்களுக்கு வளமான வாழ்க்கை பெற்றுக்கொடுக்க வேண்டும். இந்த பகுதியில் காட்டு யானைகள் அச்சுறுத்தல் உள்ளது. அரசாங்கம் என்ற வகையில் யானை- மனித மோதல் தொடர்பில் தீர்வு காண நடவடிக்கை எடுத்துள்ளோம்.
கல்கமுவ, அம்பன்போல உள்ளிட்ட 5 பிரதேசங்களில் விசேட காரியாலயங்களை அமைத்துள்ளோம். ஆனால் அங்கு ஆளணி பற்றாக்குறை உள்ளது. அதனை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.பாதுகாப்பு கடமைகளுக்காக சிவில் பாதுகாப்பு அதிகாரிகளையும் இங்கு கடமையில் ஈடுபடுத்தியுள்ளோம்.
எம்மிடம் தெளிவான திட்டம், நோக்கம் உள்ளது.வேலைத்திட்டம் மற்றும் திட்ட வரைபும் உள்ளது. மக்களுடன் இணைந்து இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண நாம் நடவடிக்கை எடுப்போம்.இதுவே எமது இலக்கு. அதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். இந்த மக்கள் பெற்றுத் தந்த அந்த மக்களாணையினை எதிர்பார்ப்பையே தற்போது நாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் தேர்தலில் தோல்வியடைந்த சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் அரசாங்கத்துக்கு எதிராக போலியான பிரசாரங்களை முன்னெடுத்துள்ளனர். ஆனால் நாம் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். இந்த மக்களுடன் எமக்குள்ள பிணைப்பு மற்றும் அந்த மக்களாணையின் எதிர்பார்ப்பை ஆழமாக புரிந்து கொண்டு அதற்கேற்பவே நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்றார்.