தேசிய நல்லிணக்கத்தையும், ஒருமைப்பாட்டையும் கட்டியெழுப்பும் தரப்பினர் என்ற அடிப்படையில் யாழ் நூலக அபிவிருத்திக்கு 100 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி ஒதுக்கியுள்ளதை வரவேற்கிறோம்.
வடக்கு மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாடு மற்றும் சிந்தனை மாற்றம் ஆகியவற்றுக்கான சிறந்த திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அவ்வாறான திட்டங்களுக்கு நிபந்தனையற்ற வகையில் ஆதரவளிப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 7 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
வரவு செலவுத் திட்டத்தின் அனைத்து முன்மொழிவுகளையும் விமர்சிக்கும் நிலைப்பாட்டில் எதிர்க்கட்சி இல்லை. யாழ் நூலகம் எரிப்பு தொடர்பில் ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
இதனை உணர்வுபூர்வமாக பார்க்க வேண்டும்.தேசிய நல்லிணக்கத்தையும், ஒருமைப்பாட்டையும் கட்டியெழுப்பும் தரப்பினர் என்ற அடிப்படையில் யாழ் நூலக அபிவிருத்திக்கு ஜனாதிபதி 100 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதை வரவேற்கிறோம்.
யார் செய்தாலும் தவறு , தவறேயாகும். வடக்கு மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாடு மற்றும் சிந்தனை மாற்றம் ஆகியவற்றுக்காக சிறந்த திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அவ்வாறான திட்டங்களை வரவேற்போம்.
கர்ப்பிணி தாய்மார்களுக்கும், பிள்ளைகளுக்குமான போசனைத் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை சிறந்தது. பொருளாதார நெருக்கடியால் பிள்ளைகள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பிள்ளைகளே எமது எதிர்காலம். ஆகவே பிள்ளைகளுக்கு ஆரோக்கியத்தையும், சிறந்த கல்வியையும் வழங்க வேண்டும்.
நாட்டில் பெரும்பாலான பாடசாலைகளில் சுத்தமான குடிநீர் மற்றும் தரமான மலசலகூட வசதிகள் கிடையாது. இந்த பிரச்சினை குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். தேசிய மக்கள் சக்தி வழங்கிய வாக்குறுதிகள் மீது நம்பிக்கை வைத்து நாட்டு மக்கள் இந்த அரசாங்கத்துக்கு பாரிய ஆணையை வழங்கினார்கள்.
கல்வித் துறைக்கு விதிக்கப்பட்டுள்ள வெற் வரியை நீக்குவதாக தேர்தல் காலத்தில் குறிப்பிடப்பட்டது. ஆனால் வரவு செலவுத் திட்டத்தில் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. மாறாக பாடசாலை மாணவர்களை குறைந்த வருமானமுடையவர்களாக குறிப்பிட்டு அவர்களுக்கு 6000 ரூபாய் வழங்கப்படுகிறது. இது வேதனைக்குரியது.
குறைந்த வருமானமுடையவர்களின் பிள்ளைகள் என்று பாடசாலை மாணவர்களை எவ்வாறு அடையாளப்படுத்த முடியும். பத்திரிகையில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ' 6000 ரூபாய் கொடுப்பனவுக்கான பற்றுறுதி சீட்டை (வவுச்சர்) பெற்றக்கொள்வதற்காக பெற்றோர் பாடசாலைக்குச் சென்ற போது, வவுச்சர் வேண்டுமாயின் பாடசாலை அபிவிருத்தி கட்டணத்தை செலுத்துங்கள் ஏனெனில் பாடசாலை அபிவிருத்திக்கு அரசாங்கம் நிதி வழங்கவில்லை என்று பாடசாலை அதிபர் குறிப்பிட்டுள்ளதாக ' குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே பாடசாலை கட்டமைப்பு தொடர்பில் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை.
சுகாதார கட்டமைப்பிலும் இந்த நிலையே காணப்படுகிறது. சுகாதாரம் மீதான வெற் வரியை நீக்குவதாகவும் அரசாங்கம் தேர்தல் காலத்தில் குறிப்பிடப்பட்டது. இன்று மருந்துகளின் விலை பன்மடங்கு உயர்வடைந்துள்ளது.
அரச வைத்தியசாலைகளில் அதிக கேள்வியுடைய மருந்துகள் இல்லாத காரணத்தால் தனியார் மருந்தகங்களில் அவற்றை பெற்றுக்கொள்ளும் நிலைக்கு நடுத்தர மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
ஆகவே கல்வி மற்றும் சுகாதார துறை தொடர்பில் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை முழுமையாக செயற்படுத்துங்கள் என்று அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)