Our Feeds


Thursday, February 13, 2025

SHAHNI RAMEES

வண்ணாத்தி கட்சியின் வருடாந்த பேராளர் மாநாடு!

 


ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் வருடாந்த பேராளர் மாநாடு

: புதிய நிர்வாகத்துடன், புதிய பிரகடனங்களுடன் முன்னோக்கி நகர வண்ணாத்தி ஆயத்தம் ! 


ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் வருடாந்த பேராளர் மாநாடு கொழும்பு மருதானை குப்பியாவத்தை மாநகர மண்டபத்தில் முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத்தின் நெறிப்படுத்தலில் இன்று (12) நாட்டின் பல்வேறு பிரதேச பேராளர்களின் பிரசன்னத்துடன் விமர்சையாக நடைபெற்றது. 


ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் யாப்பில் திருத்தமொன்றை மேற்கொண்டு சிரேஷ்ட பிரதித்தலைவர் எனும் பதவி நீக்கப்பட்டு சிரேஷ்ட தலைவர் எனும் பதவி புதிதாக இணைக்கப்பட்டு அப்பதவிக்கு முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவுசெய்யப்பட்டார். மேலும் புதிய தவிசாளராக மௌலவி ஐ.எல்.எம். மிப்ளால் அவர்களும் அண்மையில் தனது செயலாளர் பதவியை இராஜினாமா செய்த முன்னாள் அமைச்சர் எம்.ரீ. ஹசனலியின் இடத்திற்கு புதிய செயலாளராக கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஐ.ஏ. கலீலுர் ரஹ்மானும், பொருளாளராக எச்.எம். ஹக்கீம் அவர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள். 

 

மேலும், தலைவர் ஒன்று எனும் பதவிக்கு அக்கறைப்பற்றை சேர்ந்த அக்பர் அலியும், தலைவர் இரண்டு எனும் பதவிக்கு சாய்ந்தமருதை சேர்ந்த கலாநிதி ஹக்கீம் செரீப், தேசிய அமைப்பாளராக கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் எம்.பி.காதர், தேசிய பிரச்சார செயலாளராக கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் முஸம்மில், தேசிய இணைப்பு செயலாளராக டாக்டர் முஹம்மட் பரீட், உலமா பிரிவின் தலைவராக முஹம்மட் ஆமீர் முப்தி உட்பட பல நிர்வாகிகளும் இதன்போது தெரிவுசெய்யப்பட்டார்கள். 


இந்த பேராளர் மாநாட்டின் பிரகடனமாக பலஸ்தீன் சுதந்திர நாடாக அங்கீகரிக்கப்பட வேண்டும், காஸ்மீருக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் சுதந்திரமளிக்க முன்வர வேண்டும், ஜனாஸா எரிப்புக்கு எதிராக விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும், அந்த எரிப்பில் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும், ஈஸ்டர் தாக்குதலில் பழி சுமந்துள்ள முஸ்லிங்களின் மீது குத்தப்பட்ட வீணான சொற்பிரயோகங்கள்  களையப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும், இவ்வாறான தாக்குதல்களை ஒரு சமூகத்தின் மீது சுமத்தாமல் அரசே பொறுப்பேற்க வேண்டும், சுதந்திரத்திற்கு பின்னரான அமைச்சரவையில் இப்போதைய அமைச்சரவையிலையே முஸ்லிங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளார்கள் அந்த விடயம் நிபர்த்திக்கப்பட வேண்டும், மேல் மாகாணத்தில் கொழும்பு போன்ற பிரதேசங்களில் முஸ்லிங்களின் கல்வியை மேம்படுத்த தேவையான வசதிகளை அரசு வழங்க முன்வர வேண்டும், முஸ்லிங்கள் கல்வி கற்க புதிய பாடசாலைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டு பிரகடனம் நிறைவேற்றப்பட்டது.


நீண்டகாலமாக ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயற்பாடுகளில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பணியாற்றிவந்த பலருக்கும் உயர்பீட உறுப்பினர் பதவிகள் உட்பட முக்கிய பல பொறுப்புக்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »