Our Feeds


Friday, February 21, 2025

Zameera

டிஜிட்டல் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து எதிர்கால வேலைத்திட்டங்களை தெளிவுபடுத்தும் செயலமர்வு


 அரசாங்கத்தின் டிஜிட்டல் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்து சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும் தெளிவுபடுத்தும் செயலமர்வொன்றை எதிர்வரும் மார்ச் 10ஆம் திகதி நடத்துவதற்கு டிஜிட்டல் பொருளாதார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

 

குறித்த குழு டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் நேற்று (20) பாராளுமன்றத்தில் கூடியபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவும் கலந்துகொண்டார்.

 

இங்கு டிஜிட்டல் பொருளாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவிருக்கும் பகுதிகள் குறித்து டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகள் கருத்துக்களை முன்வைத்தனர். அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் செயற்பாட்டின் முன்னணியாளரான ICTA நிறுவனத்தை டிஜிட்டல் பொருளாதார அதிகாரசபையின் கீழ் கொண்டுவந்து, வினைத்திறனான முறையில் அதன் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சின் அதிகாரிகள் குழுவில் சுட்டிக்காட்டினர்.

 

மேலும், அரசாங்க நிறுவனங்கள் பல்வேறு நிறுவனங்களைப் பயன்படுத்தி அவற்றின் ஊடாக தங்கள் தரவுகளையும், தகவல்களையும் சேகரிப்பதற்கு வெவ்வேறுபட்ட தளங்களை உருவாக்கியிருப்பதாகவும், அவற்றை எதிர்காலத்தில் ஒரு நிறுவனத்தின் கீழ் கொண்டுவர வேண்டியதன் அவசியத்தையும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, இதுபோன்ற கட்டமைப்புக்கள் அரசாங்கத்தின் மேற்பார்வையின் கீழ் உருவாக்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறான கட்டமைப்புக்களைத் தற்பொழுது உருவாக்க வேண்டாம் என்றும் அமைச்சுக்களின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியிருப்பதாகத் தெரிவித்தார். ஒவ்வொரு நிறுவனத்திற்கும் காணப்படும் தேவைகளைப் புரிந்துகொண்டு அவற்றுக்கு ஏற்ற வகையில் அக்கட்டமைப்புக்களை உருவாக்கி பராமரிக்கப்படுவது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

 

அத்துடன், நாட்டின் சில பகுதிகளில் தொலைபேசி சமிக்ஜைகளில் காணப்படும் குறைபாடுகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். கிரமாத்திற்குத் தொடர்பாடல் என்ற திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் 50 புதிய தொடர்பாடல் கோபுரங்கள் அமைக்கப்படவிருப்பதாகவும், இதன் ஊடாக இந்தப் பிரச்சினையைக் குறிப்பிட்டளவு தீர்க்க முடியும் என்றும் அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

 

இந்தக் கலந்துரையாடலில் க்ரிப்டோ பணத்தின் (crypto) பயன்பாடு குறித்து கருத்துத் தெரிவிக்கப்பட்டதுடன், இலங்கைக்குள் அவற்றின் பயன்பாட்டுக்கு இடமளிப்பதா இல்லையா என்பதை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் வழங்கும் பரிந்துரையின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

 

இக்கூட்டத்தில், இலங்கை பிரஜைகளின் தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை எவ்வாறு கையாள்வது மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ளவர்களின் சம்பளங்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

 

இதில் அமைச்சர்கள், டிஜிட்டல் பொருளாதார பிரதியமைச்சர் எரங்க வீரரத்ன, பிரதியமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்கள், டிஜிட்டல் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் செயலாளரும், டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் விசேட ஆலோசருமான (கலாநிதி) ஹான்ஸ் விஜேசூரிய, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளர், தொடர்பாடல் திணைக்கள (பதில்) பணிப்பாளர் எம்.ஜயலத் பெரேரா உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »