Our Feeds


Monday, February 17, 2025

Sri Lanka

விமர்சிக்கும் தரப்பினரை வீடு சென்று அச்சுறுத்தும் அரசு!


தற்போதைய அரசாங்கம் என்னவாறான பொய்களை எல்லாம் கூற முடியுமோ அத்தனையையும் கூறி மக்களை ஏமாற்றியுள்ளது. மக்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது. சொன்னதைச் செய்ய முடியாமல் அரசாங்கத்தை விமர்சிக்கும் தரப்பினரை அச்சுறுத்துகிறார்கள். அரசியலமைப்பு பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தையும், தாம் விரும்பும் அரசியல் கருத்தைக் கொண்டிருப்பதற்கான சுதந்திரத்தையும் வழங்குகிறது. இது இந்த நாட்டில் காணப்படும் மனித உரிமையாகும். இந்த அரசாங்கம் இதையும் மீறி நடந்து வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

களனி பிரதேசத்தில் நேற்று (16) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

மாத்தளை மாவட்டத்தின் யடவத்தை பிரதேசத்தை சேர்ந்த பிரஜை ஒருவர் தனது கருத்துக்களை முகநூல் ஊடாக வெளிப்படுத்திய போது அரசாங்கத்தையும், மக்கள் விடுதலை முன்னணியையும் சேர்ந்த ஒருவர், வீடு சென்று அரசாங்கத்தை விமர்சிப்பதை நிறுத்துமாறு அழுத்தம் கொடுக்கிறார். அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத வேளையில், பேச்சு சுதந்திரத்தை மறுக்கும் வகையில் வீடு வீடாகச் செல்லும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

இந்த நாட்டில் உள்ள 220 இலட்சம் மக்களும் எவருக்கும் அஞ்சாமல் சுதந்திரமாக தமது கருத்துக்களை வெளியிடும் உரிமை அவர்களுக்கு காணப்படுகின்றன. குடி மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் முன்நிற்கும். பேச்சு சுதந்திரமும் கருத்து சுதந்திரமும் என்பது தனிமனித உரிமைகளாகும். அதில் யாரும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »