Our Feeds


Saturday, February 8, 2025

Zameera

ஏற்றுமதியாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு


 வலுவான பொருளாதார அடித்தளத்திலிருந்து மீண்டும் எழுச்சி பெற ஏற்றுமதியாளர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்தார். மிகவும் வலுவான நிலையில் இருந்து சந்தையைக் கைப்பற்றும் சவாலை நாம் எதிர்கொள்ளாததால், வேறொரு தரப்பிலிருந்து ஆதரவைப் பெற வேண்டியிருந்தது என்பதை நினைவுபடுத்திய ஜனாதிபதி, தற்போது இருக்கும்

பொருளாதார ஸ்தீர நிலமையில் இருந்து கைத்தொழில் அமைக்கப்பட்டுள்ள அடித்தளத்திலிருந்து மீண்டும் எழுச்சி பெற  தனது அரசாங்கம் ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாகவும்  ஜனாதிபதி தெரிவித்தார்.

 26ஆவது ஜனாதிபதி ஏற்றுமதி விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். இலங்கை ஏற்றுமதி ஊக்குவிப்பு சபையினால்  (EDB) ஏற்பாடு செய்யப்பட்ட 26ஆவது ஜனாதிபதி ஏற்றுமதி விருது வழங்கும் விழா நேற்று  (07) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு விலைமதிப்பற்ற சேவையைச் செய்த ஏற்றுமதியாளர்களை அங்கீகரிப்பதே இந்த விருது வழங்கும் விழாவின் முக்கிய நோக்கமாகும்.

அதன்படி,ஏற்றுமதித் துறைக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் விதிவிலக்கான பங்களிப்புகளைச் செய்த இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு, ஜனாதிபதியால் வழங்கப்படும் மிக உயரிய விருதான ஜனாதிபதி ஏற்றுமதி விருது,  வழங்கப்படுகிறது. இலங்கை ஏற்றுமதி ஊக்குவிப்பு சபையினால் 1981 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் வழங்க ஆரம்பிக்கப்பட்டதுடன்,  இந்த ஆண்டு விருதுகள் 2023/24 நிதியாண்டில் இலங்கையின் சிறந்த ஏற்றுமதியாளர்களை அங்கீகரிப்பதற்காக வழங்கப்பட்டன. 

 மொத்தம் 14 விருதுகள் மற்றும் 51 தயாரிப்பு மற்றும் சேவைத் துறை விருதுகள்  இரண்டு முக்கிய பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டன. விருது பெற்றவர்கள் ஜனாதிபதி ஏற்றுமதி விருது சின்னத்தை 3 ஆண்டுகளுக்கு சந்தைப்படுத்தல் சின்னமாகப் பயன்படுத்த முடியும். ,
இன்றைய சந்தை ஒரு உலகளாவிய சங்கிலியாக மாறியுள்ளதென கூறிய ஜனாதிபதி, அதில் பங்குதாரராக  மாறுவதற்கு, நாட்டுக்கு  சாதகமான வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்ய வேண்டும் என்றும், பிடிவாதமாக தன்னிச்சையான குழந்தையைப் போல சந்தையை ஆக்கிரமிக்க முடியாது என்றும் வலியுறுத்தினார். தரமான சந்தையில் நுழைவதற்குத் தேவையான தொழில்நுட்ப ஆதரவை வழங்க தனது அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி கூறினார். உலகில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப புதிய பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதில் அரசாங்கம் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். 

மின்சாரக் கட்டணங்களில் நிலையான குறைப்பைப் பேண புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்து அதிக கவனம் செலுத்தப்படும் என்றும், சில ஆண்டுகளுக்குள் செலவுகளைக் குறைத்து நிலையான விலையை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதாரத்தை மற்றுமொரு நிலைக்கு கொண்டு செல்ல அரசாங்கம் அதிகபட்ச முயற்சிகளை மேற்கொள்ளும் என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். 

ஒரு சிறிய தவறு கூட பொருளாதாரத்திற்கு ஆபத்தான அடியாக அமையக்கூடும் என்பதால், பொருளாதாரம் தொடர்பான முடிவுகளை எடுக்கும்போது மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார். 

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் என்ற வகையில் ஏற்றுமதியாளர்களின் கோரிக்கைகள் தற்போது போடப்பட்டுள்ள அடித்தளத்தை பாதிக்காத வகையில் முன்னெடுப்பதாகவும்  ஜனாதிபதி உறுதியளித்தார்.

நாடு தற்போது பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு கவனமாக நகர்ந்து வருவதால்,  பரஸ்பர புரிதலுடன் இந்தக் கடினமான தடையைத் தாண்டுவதில் கைகோர்க்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். 



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »