Our Feeds


Friday, March 7, 2025

Sri Lanka

ஓய்வில் இருக்கின்றேன் தேவையேற்பட்டால் மீண்டும் வருவேன் - ரணில்!


‘‘நான் தற்போது ஓய்வில் இருக்கிறேன். ஆனால் தேவையான சகல ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருக்கிறேன்’’ என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்துக்கும் இடையிலான விசேட சந்திப்பு கொழும்பு ப்ளவர் வீதியிலுள்ள அவரின் அலுவலகத்தில் 05ம் திகதி இடம்பெற்றது.

அடிப்படைச் சம்பளத் திருத்தத்துடன் 1/80 என்ற அடிப்படையில் மேலதிக நேரக் கொடுப்பனவை அவ்வாறே வழங்குதல், விடுமுறை நாள், ஞாயிற்றுக்கிழமைகளில் பணிபுரிதல் என்பவற்றுக்காக வழங்கப்படும் 20/1 வீதக் கொடுப்பனவை அவ்வாறே முன்னெடுத்தல், 2025ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பை அவ்வாறே முன்னெடுத்தல் உள்ளிட்ட மீளாய்வு தொடர்பான யோசனைகள் மற்றும் வேலைத்திட்ட செயன்முறைகள் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தால் முன்னாள் ஜனாதிபதி ரணிலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பான கலந்துரையாடலின் பின்னர் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் ரணில் விக்கிரமசிங்கவிடம், ‘‘உங்களைப் போன்ற அனுபவம்கொண்ட தலைவர் தற்போது பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்வது பொருத்தமானதாக இருக்கும்’’ என்று கூறியுள்ளனர்.

அதற்கு ரணில் விக்கிரமசிங்க, ‘‘இல்லை. நான் தற்போது ஓய்வில் இருக்கிறேன். இருந்தபோதும் உங்களுக்குத் தேவையான எந்தவொரு ஒத்துழைப்பையும் பெற்றுக்கொடுக்கத் தயாராக இருக்கிறேன்’’ என்று பதில் வழங்கியுள்ளார்.

அந்தச் சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, ‘‘நாம் நாட்டுக்காக அவரிடமிருந்து வேலையைப் பெற்றுக்கொள்வோம்’’ என்று வைத்திய அதிகாரிகளுக்குக் கூறியிருக்கிறார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »