Our Feeds


Friday, March 7, 2025

Sri Lanka

தோட்ட வைத்தியசாலைகளை அரசுடைமையாக்குவது தொடர்பில் பேச்சுவார்த்தை - நளிந்த ஜயதிஸ்ஸ!


பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள தோட்ட வைத்தியசாலைகள் குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளன. தோட்ட வைத்தியசாலை
களை அரசுடைமையாக்குவது தொடர்பில் பெருந்தோட்ட அமைச்சு, காணி அமைச்சு மற்றும் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு ஆகிய தரப்புக்களுடன்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். 44  தோட்ட வைத்தியசாலைகளை அரசுடமையாக்குவது  தொடர்பான  நிருபம் எதிர்வரும் வாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படுமென சுகாதாரத்துறை அமைச்சர்  நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (06)  நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான  வரவு, செலவுத் திட்டத்தின்      சுகாதாரத்துறை மற்றும் ஊடகத்துறை அமைச்சு மீதான  குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே  மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பொருளாதார  பாதிப்புக்கு மத்தியிலும் இம்முறை அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  முதல் நிலை வைத்திய சேவை,  வைத்தியசாலை கட்டமைப்பு அபிவிருத்தி, மருந்து விநியோகம், போசனை மட்டம் மற்றும் உலகளாவிய மட்டத்தில் சுகாதார சேவையை  திறம்படுத்தல் ஆகிய ஐந்து  துறைகளின் ஊடாக  சுகாதார சேவையை அபிவிருத்தி செய்ய   உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள தோட்ட வைத்தியசாலைகள் குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளன. தோட்ட வைத்தியசாலைகளை அரசுடைமையாக்குவது தொடர்பில் பெருந்தோட்ட அமைச்சு,   காணி அமைச்சு மற்றும் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு ஆகிய தரப்புக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள 44 தோட்ட வைத்தியசாலைகளை அரசுடமையாக்குவது  தொடர்பான  நிருபம் எதிர்வரும் வாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும்.

வைத்தியசாலைகள் அபிவிருத்தி தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளன. தேசிய வைத்தியசாலை,  பொது வைத்தியசாலை, போதனா   வைத்தியசாலை, ஆதார மற்றும் மாவட்ட வைத்தியசாலை என்ற அடிப்படையில்  பல வைத்தியசாலைகள் காணப்படுகின்றன. இந்த வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

கண்டி,  திருகோணமலை, கேகாலை, அம்பாறை மற்றும் சிலாபம் ஆகிய  மாவட்டங்களில் உள்ள அரச வைத்தியசாலைகளின் அவசர சிகிச்சை பிரிவை அபிவிருத்தி செய்வதற்கு 1.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்குள் இந்தத்  திட்டம் நிறைவுப்படுத்தப்படும். இருதய நோய் குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. கொழும்பு  சீமாட்டி வைத்தியசாலையில் இருதய நோய் சிகிச்சை பிரிவினை அமைப்பதற்கு 1600 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.  பிள்ளைகள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் இருதய நோய் சடுதியாக அதிகரித்து வருவதை கட்டுப்படுப்படுத்த  விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மக்கள் மத்தியில் புற்றுநோயால் பாதிக்கப்படும் விகிதம் உயர்வடைந்துள்ளது. வருடாந்தம் 36 ஆயிரம் பேர்  புற்றுநோயாளர்களாக அடையாளம் காணப்படுகின்றன நிலையில் அவர்களில் 24 ஆயிரம் பேர் முறையாக சிகிச்சை பெறுகின்றனர். 22 அரச வைத்தியசாலைகளில்  புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கப்படுகிறது.  அநுராதபுரம், குருநாகல், பதுளை,  அம்பாந்தோட்டை ஆகிய  மாவட்டங்களில் உள்ள அரச வைத்தியசாலைகளுக்கு புற்றுநோய் சிகிச்சைக்காக  லினொக்  மருத்துவ  சாதனத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆயுர்வேத வைத்திய முறைமையை  மேம்படுத்த வரவு செலவுத் திட்டத்தில் 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஆங்கில மருத்துவ முறைமைக்கு இணையாக  பாரம்பரிய ஆயுர்வேத வைத்திய முறைமையும் அபிவிருத்தி செய்யப்படும். எக்காரணிகளுக்காகவும் நாட்டில் மருந்து தட்டுப்பாடு ஏற்படாது. தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான மருந்து விநியோகத்துக்கு இம்முறை 183 மில்லியன் ருபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே  மருந்து  விநியோகம் சீராக முன்னெடுக்கப்படும்.

சுகாதார சேவையில் நிலவும் சம்பள முரண்பாட்டுக்கு  இம்முறை  தீர்வு முன்வைக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவையாளர்கள் இன்று (நேற்று) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவிருந்தார்கள். தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு  தொழிற்சங்க போராட்டத்தை தடுத்துள்ளோம்.  எக்காரணிகளுக்காவும் சுகாதார சேவை பலவீனமடையாது என்பதை  நாட்டு மக்களுக்கு குறிப்பிட்டுக் கொள்கிறோம் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »