Our Feeds


Saturday, March 8, 2025

Sri Lanka

தவறான புரிதலுடன் தேர்தல்கள் ஆணைக்குழு - சுட்டிக்காட்டிய ரவூப் ஹக்கீம்!

தவறான புரிதலுடன் ஆணைக்குழு தேர்தல் அறிவிப்பை விடுத்துள்ளதாக பாராளுமன்றத்தில் 04ம் பொதுநிருவாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சின் மீதான செலவு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

தொடர்ந்து உரையாற்றிய அவர், 

மார்ச் 17 முதல் 20ம் திகதி வரை கல்முனை மாநகர சபை, மன்னார், பூநகரி, எல்பிட்டிய, தெஹியத்தகண்டி பிரதேச சபைகள் தவிர்ந்த அனைத்து உள்ளூராட்சி மன்றத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் ஏற்றுக்கொள்ளப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தல் விடுத்திருப்பதாக தினக்குரல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட ஐந்து உள்ளூராட்சி மன்றங்கள் தவிர்ந்த ஏனைய உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என்பது இதன் அர்த்தமாகும். 

இந்த விடயம் சரி செய்யப்பட வேண்டும். குறிப்பிடப்பட்டிருக்கின்ற கல்முனை மாநகர சபைக்கு தடையுத்தரவு ஒன்றுள்ளதுடன், மன்னார் மற்றும் தெஹியத்தகண்டி பிரதேச சபைகளுக்கான எமது வேட்புமனு நிராகரிக்கப்பட்டமையினால் நானே அவ்வழக்கில் தோன்றி, உயர் நீதிமன்றத்தடையுத்தரவைப் பெற்றுக் கொண்டேன். 

அத்தடையுத்தரவு தேர்தலை நடத்துவதற்கெதிராக பெற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், குறித்த தடையுத்தரவு வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பானது. தற்போது வேட்புமனு இரத்தாகிவிட்டதால் அத்தடையுத்தரவு ஏற்புடையதாகாது.

தவறான புரிதலுடன் தேர்தல்கள் ஆணைக்குழு இவ்வறிவித்தலை விடுத்திருக்கின்றது. இதனை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பதனுடன்  இவ்வழக்கை வாபஸ் பெறுவதற்கு உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளேன். (கடந்த 06ம் திகதி வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

அதே நேரம். மன்னார், தெஹியத்தகண்டி உள்ளூராட்சி மன்றங்களுக்கும் இருக்கின்ற வேட்பு மனுவுக்கெதிராக தடையுத்தரவும் தற்போது இரத்தாகி விட்டது. 

எம்மால் வாபஸ் பெறும்பட்சத்தில் குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தேர்தல்கள் நடத்த முடியும் எனத்தெரிவித்தார்.

குறித்த செய்தி தொடர்பான பின்னிணைப்பு 

உள்ளூராட்சிமன்றத்தேர்தலுக்கு மன்னார், தெஹியத்தகண்டிய பிரதேச சபை ஆகியவற்றுக்கு முறையே ஸ்ரீலங்கா முஸ்லிம காங்கிரஸ், ஐக்கிய தேசிய கூட்டமைப்பு என்பன தாக்கல் செய்திருந்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கெதிராக தொடுக்கப்பட்டிருந்த இரு வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை (06) உயர்நீதிமன்ற நீதியரசர்களான மஹிந்த சமயவர்தன, மேனகா விஜேசுந்தர ஆகியோர் முன்னிலையில் இம்மனுக்கள் மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டன. 

இவ்விரு வழக்குகளிலும் மனுதாரர்கள் சார்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் உயர்நீதிமன்றத்தில் வாதாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

(எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »