கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு அனுமதிக்கும்போது இருந்த ஹம்தி பஸ்லீனின் சிறுநீரகங்கள் சத்திரசிகிச்சைக்கு பின்னர் காணாமல்போயுள்ளமை தொடர்பான விசாரணை அறி்கையை வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முஜுபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தின் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் 2022 டிசம்பர் மாதம் 24ஆம் திகதி சிறுநீரக பிரச்சினையால் அனுமதிக்கப்பட்டு மரணித்த 3வயது சிறுவனான ஹம்தி பஸ்லீனின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.. ஹம்தி பஸ்லீன் வலது பக்க சிறுநீரகத்தில் ஏற்பட்டிருந்த நோய் காரணமாகவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 2022, 12,24ஆம் திகதி சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சத்திரசிகிச்சைக்கு பின்னர் சிறுவன் தொடர்ந்து அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 2023,03, 27ஆம் திகதி மரணமடைந்துள்ளார். இந்த மரணம் தொடர்பாக சிறுவனின் பெற்றோர் வைத்தியசாலை பிரதான வைத்தியரை நாடி தொடர்ந்தும் வினவிவந்தபோதும் பிரச்சினை ஒன்று இடம்பெற்றிருக்கிது. அது தொடர்பில் விசாரணை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் சத்திரசிகிச்சை மேற்கொண்ட வைத்தியர் 2024,ஜனவரி 5ஆம் திகதி நாட்டைவிட்டு சென்றுள்ளார்.
குறித்த சிறுவன் மரணிப்பதற்கு முன்னர் தனியார் வைத்தியசாலை ஒன்றில் பெற்றுக்கொண்ட மருத்து அறிக்கைகளில் 2சிறுநீரகங்களும் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.அதேநேரம் கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கு பின்னர் சிறுவனின் வலது பக்க சிறுநீரத் வைத்தியசாலையின் சம்பந்தப்பட்ட பிரிவு பெற்றுக்கொண்டதாக அதன் வைத்தியரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பில் வழக்கொன்றும் தொடுக்கப்பட்டு்ள்ளது. இந்த வழக்கில் வைத்தியர்களின் வாக்குமூலம் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகும். ஆனால் சுகாதார அமைச்சு இதுதொடர்பில் எந்தவித விசாரணையும் மேற்கொண்டு இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
சிறுவனின் சத்திர சிகிச்சைக்கு பின்னர் இரண்டு சிறுநீரகங்களும் இருந்ததாக வைத்திய அறிக்கைகள் இருக்கின்றன. இதுதொடர்பாக இதற்கு முன்னர் இருந்த சுகாதார அமைச்சர்களான கெஹலிய ரம்புக்வெல மற்றும் ரமேஷ் பத்திரண ஆகிய இரண்டு பேரிடமும் இதுதொடர்பில் இந்த சபையில் கேட்டபோது, விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டுவருகிறது. வழங்குவதாக குறிப்பிட்டனர். ஆனால் இதுவரை அந்த அறிக்கை கிடைக்கப்பெறவில்லை.
அதனால் தற்போதுள்ள சுகாதார அமைச்சர் இதுதொடர்பில் முறையான விசாரணை மேற்கொண்டு குறித்த சிறுவனின் சிறுநீரங்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு, சிறுவனின் குடும்பத்தினருக்கு நீதியை பெற்றுக்கொண்டுக்க வேண்டும் என்றார்.
(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)