எந்த நாட்டின் முன்னாலும் நாங்கள் மண்டியிட மாட்டோம் என்றும் இந்தியாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தினூடாக எந்தக் காட்டிக்கொடுப்பும் இடம்பெறாது என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று (08) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. அதன்போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
‘‘இந்தியப் பிரதமரின் விஜயத்துடன் 07 புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டோம். சுகாதாரம், மின்சக்தி, டிஜிட்டல் பொருளாதாரம், கிழக்கு மாகாண அபிவிருத்தி, பாதுகாப்பு ஆகிய துறைகளுக்காகவே இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.
ஆனால், இந்த ஒப்பந்தத்தினூடாக நாட்டை காட்டிக்கொடுத்துள்ளோம் என்றும் கூறுகிறார்கள். இவற்றில் நீண்ட ஒப்பந்தங்கள் தொடர்பில் நீண்டகால பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஒருசில ஒப்பந்தங்கள் எங்களின் அரசாங்கத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டவை. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இதுதொடர்பில் கவனம் செலுத்தி அநேகமான மாற்றங்களை செய்துள்ளோம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் இருக்கின்றன. அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே இதில் கைச்சாத்திட நடவடிக்கை எடுத்தோம். இந்திய சமுத்திர வலய பாதுகாப்பு தொடர்பில் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் பொறுப்பு இருக்கிறது. அதற்கமைய, இருநாட்டுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புக்காகவே இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பில் பாதுகாப்பு பிரதானிகள், பாதுகாப்பு அமைச்சுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தி இந்திய அரசாங்கத்துக்கு முன்வைத்ததன் பின்னரே இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளோம். இதில் பயங்கொள்ள எதுவுமில்லை. தேவைக்கு ஏற்றாற் போன்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினூடாக இந்த ஒப்பந்தத்தை பெற்றுக்கொள்ள முடியும். இதற்கு அப்பால் செயற்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இது புரிந்துணர்வு ஒப்பந்தம் மாத்திரமே. இவற்றில் எந்த ஒப்பந்தமும் நாட்டுக்கு விரோதமானவை அல்ல. விரோதமான ஏற்பாடுகளை நீக்கிவிட்டே நாட்டின் சுயாதீனத் தன்மையை பாதுகாக்கும் வகையிலேயே இந்த ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளோம்.
நாங்கள் கடந்த அரசாங்கங்களைப் போன்றல்ல. எந்த நாட்டின் முன்னாலும் மண்டியிட மாட்டோம். மக்களின் அபிலாஷைகளை பிரதிநிதித்துவம் செய்வதே எங்களின் அவசியமாகும். தற்போதைய ஜனாதிபதியின் கடந்த கால வெளிநாட்டு விஜயங்களின்போது எங்களின் நிலைப்பாடுகளை தெளிவாக அறிவித்திருந்தோம். நாட்டு மக்களுக்காக நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளோம். ஏற்றுக்கொள்ள முடியாத சந்தர்ப்பங்களில் அவற்றை தெளிவாகக் கூறியுள்ளோம். வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் சகல சலுகைகளையும் ஏற்றுக்கொண்டு அவற்றை பொறுப்பேற்கும் அரசாங்கமும் நாங்கள் இல்லை. இதனூடாக எந்த காட்டிக்கொடுப்பும் இடம்பெறாது’’ என்றார்