“உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் 50 சதவீதம் ஆட்சி அதிகாரம் கிடைக்காத சபைகளிலும் தேசிய மக்கள் சக்தியே நிச்சயமாக ஆட்சியமைக்கும். தற்போது வரையிலும் பல்வேறு குழுக்கள் எங்களுடன் கலந்துரையாடி இருக்கிறார்கள். கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைப்பதற்கு ஒத்துழைப்பை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். எனவே, கொழும்பு மாநகர சபையில் உறுதியாக நாங்களே ஆட்சியமைப்போமென்று” அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
கம்பஹா மாவட்டாத்தில் நேற்று முன்தினம் (11) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
ஆட்சி அதிகாரம் இருந்தும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரச சொத்துக்களை நாங்கள் முறைக்கேடாக பயன்படுத்தவில்லை. இதுவே மக்களுக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும்.
தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்துக்கு முன்பாகவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சியும் இருக்கிறது. ஆனால், அந்தக் கட்சி அலுவலகம் மூடப்பட்டே இருக்கிறது. ஆனால் அவர்கள் ஆட்சியிலிருந்திருந்தால் இந்த அலுவலகத்தை முன்னெடுத்துச் செல்ல அனுமதியளித்திருப்பார்களா என்று கூற முடியாது. அதற்காக நாங்கள் அவர்களின் கட்சி செயற்பாடுகளுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்துவதில்லை. புதிய அரசயில் கலாசாரத்தை எங்களின் செயற்பாட்டை காண்பித்துள்ளோம்.
சுகல தேர்தல்களும் நிறைவடைந்துள்ளன. எங்களின் கொள்கை பிரகடனத்துக்கமைய ஐந்து வருடங்களில் நாட்டை கட்டியெழுப்புவதற்கான பணிகளை முன்னெடுத்துச் செல்வதே எங்களின் நோக்கமாகும். உள்ளூராட்சி மன்றங்களையும் கைபற்றியுள்ளோம்.
இந்த தேர்தல் முடிவுகளுக்கமைய தனியாக ஆட்சி அமைப்பது சிக்கலான விடயமாகும். உண்மையில் அந்த நிறுவனங்களில் வெற்றியடைந்துள்ளோம். இருந்தபோதும் ஏனைய கட்சிகளுக்கும் ஓரளவு ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. வேறு கட்சிகளுக்கு கிடைத்த சகல ஆசனங்களும் எதிர்க் கட்சிக்குரியது மாத்திரமல்ல. அதனையும் புரிந்துகொள்ள வேண்டும். தேசிய மக்கள் சக்தி அதிக வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.மக்களும் பெரும் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்திக்கு கொடுத்துள்ளார்கள், நாங்களே வெற்றியடைந்துள்ளோம் என்பதை வெளிப்படுத்த முயற்சிக்கிறார்கள். ஒருசிலர் ஏனைய சகல கட்சிகளும் எதிர்க் கட்சிகளென்று கூறுகிறார்கள்.
சுயாதீனக் குழுக்கள் இருக்கின்றன. வடக்கு மாகாணத்தை எடுத்துக்கொண்டால் வழக்குகள் அதிக பிளவுகள் இருக்கின்றன. அவர்கள் சகலரையும் அரசாங்கத்துக்கு எதிரான எதிர்க் கட்சியாக கூற முடியாது. அவர்களில் அநேகமானவர்கள் தற்போதும் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து நாட்டை கட்யெழுப்பும் பாதையில் இணைய விரும்புவதாக கூறியிருக்கிறார்கள்.
கிராம் அதிகாரத்தை உருவாக்குவதற்காகவும் நகர அதிகாரத்தை உருவாக்குவதற்காகவும் நகர சபை பிரதேச சபைகளில் அதிகாரத்தை உருவாக்குவதற்காகவுமே மக்கள் திசைக்காட்டி சின்னத்துக்கு வாக்களித்துள்ளார்கள். எனவே, அந்த மக்கள் ஆணையை முறையாக பயன்படுத்த வேண்டும். அந்த மக்கள் ஆணையை திரிபுபடுத்த இடமளிக்க மாட்டோம். எனவே, சுயாதீனமாக அல்லது வேறு குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஒருசில உள்ளூராட்சி மன்றங்களில் ஆசனங்களை பெற்றுக்கொண்ட சிலர் இருக்கிறார்கள். அதற்கமைய, அரசாங்கத்துடன் இணைந்து பயணிக்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.
அவர்கள் சகலரின் ஒத்துழைப்பை எங்களால் பெற்றுக்கொள்ள முடியும். எனவே, 50 சதவீதத்துக்கும் பெரும்பான்மை கிடைக்காத உள்ளூராட்சி மன்றங்களிலும் வெற்றிக்கிடைத்த சகல சபைகளிலும் நிச்சயமாக நாங்களே ஆட்சியை அமைப்போம்.
அநேகமானவர்கள் கொழும்பு மாநகர சபையை இலக்கு வைத்துள்ளார்கள். கொழும்பு மாநகர சபையை பொறுத்தவரையில் நாங்கள் அதிக ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளோம். 48 ஆசனங்கள் எங்களுக்கு இருக்கின்றன. ஐக்கிய மக்கள் சக்திக்கு 29 ஆசனங்களே இருக்கின்றன. ஐக்கிய மக்கள் சக்திக்கு அதற்கான வாய்ப்பு இல்லை. தற்போது வரையிலும் பல்வேறு குழுக்கள் எங்களுடன் கலந்துரையாடி இருக்கிறார்கள். கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைப்பதற்கு ஒத்துழைப்பை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். எனவே, கொழும்பு மாநகர சபையில் உறுதியாக தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் என்றார்.