Our Feeds


Sunday, May 18, 2025

ShortNews

கட்சி செயலாளர்களுடன் சஜித் இரகசிய பேச்சு இறுதி தீர்மானம் விரைவில்.!

 

உள்ளூராட்சிமன்றங்களில் ஆட்சியமைப்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், எதிரணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகளுடன்இரகசிய பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. இனிவரும் நாட்களிலும் தொடர் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து இறுதி தீர்மானத்தை நாட்டு மக்களுக்கு அறிவிப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

இந்த பேச்சுவார்த்தைகள்  சனிக்கிழமை (17) ஆரம்பமாகின. கடந்த வியாழனன்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் எதிர்க்கட்சிகளின் செயலாளர்களுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய எதிர்க்கட்சி தலைவருடனான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய நேற்று காலை முதல் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஒவ்வொரு கட்சிகளின் செயலாளர்களையும் பிரத்தியேகமாக சந்தித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, பொதுஜன ஐக்கிய முன்னணி, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த தரப்பினர் உள்ளிட்ட பலருடன் இந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளது.

எவ்வாறிருப்பினும் இவை அனைத்தும் இரகசிய பேச்சுவார்த்தைகளாகவே அமைந்துள்ளன. இறுதி தீர்மானமொன்றை எடுத்த பின்னரே அது குறித்து நாட்டுக்கு அறிவிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. கட்சிகளின் செயலாளர்களுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

எவ்வித பேதமும் இன்றி இனிவரும் நாட்களில் தொடர்ச்சியாக கலந்துரையாட தீர்மானித்துள்ளோம். கலந்துரையாடப்பட்ட விடயங்கள் இரகசியமானவை.

அவை தொடர்பில் இப்போது ஊடகங்களுக்கு வெளிப்படுத்தி, அவற்றை சீர்குலைப்பதற்கு எதிர்பார்க்கவில்லை. கொழும்பு மாநகரசபை உட்பட எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையை பெற்றுள்ள மன்றங்களில் நிச்சயம் ஆட்சியமைப்போம்.

எதிர்க்கட்சிகளாக ஒன்றிணைந்து இதனை வெற்றிகரமாக நடைமுறை சாத்தியமாக்குவோம். ஐக்கிய தேசிய கட்சியோ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவோ எந்தவொரு கட்சியும் இதற்கு எதிர்ப்பினை வெளியிடவில்லை.

அரசாங்கத்தை விட அதிக பலத்தை மக்கள் எதிர்க்கட்சிகளுக்கு வழங்கியிருக்கின்றனர். மக்களின் அந்த ஆணைக்கமைய நாம் செயற்படுவோம்.

சபைகளை நிறுவுவதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் உள்ளன. எனவே அவசரமின்றி நிதானமாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து சகலரது இணக்கப்பாட்டுடனும் ஆட்சியமைப்போம் என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »