Our Feeds


Sunday, May 18, 2025

ShortNews

ஜனாதிபதி அநுர "தனது நற்பெயரை பாதுகாத்துக் கொள்வதற்கு" சர்வதே விசாரணைகளுக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்!

 


பிரபல அரசியல் செயற்பாட்டாளர் துசித ஹல்லொலுவ அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தொடர்பில் தெரிவித்த விடயங்கள் குறித்து சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும். இது தொடர்பான விசாரணைகளை இலங்கையில் சுயாதீனமாக முன்னெடுப்பதில் சிக்கல்கள் காணப்படுகின்றன. எனவே ஜனாதிபதி தனது நற்பெயரை பாதுகாத்துக் கொள்வதற்கு சர்வதே விசாரணைகளுக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை (18) கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்;

பிரபல அரசியல் செயற்பாட்டாளர் துசித ஹல்லொலுவ அவரது சட்டத்தரணியுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்த போது, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு அவர்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட சில ஆவணக் கோப்புக்கள் இனந்தெரியாதோரால் எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன. இது மிகவும் பாரதூரமான செயற்பாடாகும்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் துசித ஹல்லொலுவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருந்தார். ஜனாதிபதி முறையற்ற விதத்தில் சேமித்த சொத்துக்களை கிரீசில் முதலீடு செய்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில் அரச தரப்பினரால் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினால் துசிதவிடம் வாக்குமூலமும் பெறப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு பொய்யெனில் அதற்கு எதிராக சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க முடியும். இது குறித்து வெளிப்படை தன்மையுடன் சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால் இன்றைய சூழலில் பொலிஸாரால் சுயாதீனமாக செயற்பட முடியுமா என்பதே பிரச்சினையாகும்.

இந்த விசாரணைகளை இலங்கையில் சுயாதீனமாக முன்னெடுப்பதில் சிக்கல்கள் காணப்படுகின்றன. எனவே விசாரணைகளை சர்வதேச ரீதியில் அதாவது ஸ்கொட்லன்ட் யாட் பொலிஸாரிடம் ஒப்படைக்க வேண்டும். அதன் ஊடாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவரது நற்பெயரை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »