Our Feeds


Monday, May 19, 2025

ShortNews

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் கூற்றுக்களை முற்றாக மறுக்கிறேன்! - ரணில் விக்கிரமசிங்க

 


பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின்

விவகாரத்தில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு முன்வைத்துள்ள கூற்றுக்களை முற்றாக மறுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நீதிமன்ற சமர்ப்பிப்புகள் தன்னைப் பற்றி தவறாக வழிநடத்துவதாகவும் அவற்றில் சட்டப்பூர்வமாக குறைபாடுகள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.


அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் சட்டத்தரணியால் என்னைப் பற்றி நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.


அவற்றில் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ள பிணையை இரத்து செய்வதற்கான கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவோ, குற்றம் சாட்டப்பட்டவரின் சட்டத்தரணியால் முன்வைக்கப்பட்ட இந்த பிணை இரத்து கோரிக்கைக்கு ஆணைக்குழுவின் சட்டத்தரணியால் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவோ குறிப்பிடப்படவில்லை.


ஏப்ரல் 28ஆம் திகதி ஆணைக்குழுவில் நான் வழங்கிய வாக்குமூலத்தில், அமைச்சர் சமந்த வித்தியாரத்னவினால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களால் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்தின் சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதா என அவரது மனைவி என்னிடம் கேட்டதாகக் குறிப்பிட்டிருந்தேன். எவ்வாறிருப்பினும் நான் ஒரு சட்டத்தரணியாக, எந்த வெளிப்படுத்தல்களையும் செய்யும் நிலையில் இல்லை என்று கூறினேன்.


அரசியலமைப்பின் 148, 149 மற்றும் 150ஆவது உறுப்புரைகளை நான் ஆணைக்குழுவில் முன்வைத்து, அதற்கமைய பாராளுமன்றத்துக்கு பொது நிதி தொடர்பான முழுமையான அதிகாரம் காணப்படுவதோடு குறிப்பிட்ட நோக்கங்களுக்காக , சட்ட ரீதியாக ஒதுக்கப்படாத குடியரசின் நிதிகளுக்காக ஒரு ஒருங்கிணைந்த நிதியம் உருவாக்கப்பட வேண்டும்.


நிதியமைச்சர் பிறப்பித்த உத்தரவின் கீழ் தவிர, நிதியத்திலிருந்து பணத்தை எடுக்க முடியாது. அந்த சுற்றறிக்கை சட்டத்தின் மறு கூற்று மட்டுமே. சுற்றறிக்கை என்பது சட்டம் அல்ல. சட்டப்படி சரியான நடவடிக்கை என்னவென்றால், நிலையான வைப்புத்தொகையை திரும்பப் பெற்று, மாகாண பட்ஜெட்டில் அனுமதிக்கப்பட்ட நோக்கங்களுக்காக அதைப் பயன்படுத்துவதுதான்.


இந்நிலையில் இது குறித்து என்பைப் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ள முரண்பாடான கருத்துக்கள் நீதிமன்றத்தை வேண்டுமென்றே தவறாக சித்தரிப்பதாகும். அவை தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து எனது வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசிப்பேன். மேலும், இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணையை எவ்வாறு நடத்தியது என்பது குறித்து அதன் தலைவருக்கு கடிதம் மூலம் தெளிவுபடுத்தியிருக்கின்றேன் என்றுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »