Our Feeds


Monday, May 5, 2025

ShortNews

பாலியல் துஷ்பிரயோக சம்பவத்தால் மன விரக்தி! - உயிரை மாய்த்துக் கொண்ட பாடசாலை மாணவி | நீதியான விசாரணை வேண்டும்.

 

உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி டில்ஷி அம்ஷிகாவின் மரணத்துக்கு சமூகமும் பொறுப்புக் கூற வேண்டும். கல்வி அமைச்சும் சம்பந்தப்பட்ட பாடசாலையும் இந்த சம்பவத்தில் நீதியான முறையில் செயல்பட்டிருந்தால் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றிருக்காது.எந்தவொரு மாணவருக்கும் அநீதி இடம்பெறக்கூடாது. அம்ஷிகாவின் மரணத்தில் நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் தனக்கு பாடசாலையில் ஏற்பட்ட பாலியல் துஷ்பிரயோக சம்பவத்தால் மன விரக்தி அடைந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி  உயிரை மாய்த்துக் கொண்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன. 

இந்த சம்பவம் தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை (04) இலங்கை ஆசிரியர் சங்கத்தில் ஊடக சந்திப்பு ஒன்று இடம் பெற்றுள்ளது.

அதில் உயிரை மாய்த்த மாணிவியின் பெற்றோர், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்  மற்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஆசிரியை உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துத் தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மேலும் தெரிவிக்கையில், 

கடந்த 29 ஆம் திகதி டில்ஷி அம்ஷிகா என்கின்ற மாணவி அடுக்குமாடி குடியிருப்பின் 7 ஆவது மாடியிலிருந்து கீழே குதித்து உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் ஒன்று. இன்னொன்று சப்ரகமுக பல்கலைக்கழக மாணவன் தவறான முடிவு எடுத்து உயிரை மாய்த்துக் கொண்டான்.

இது போன்ற சம்பவங்கள் ஏன் நடக்கின்றன. சுகாதார அமைச்சினால் 40 பாடசாலைகளில் 3843 மாணவர்களைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் 100 க்கு 9.1 சதவீதமான மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்கள். 100 க்கு 4.4 சதவீதமானவர்கள் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்துள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் நடக்கமால் இருப்பதற்கு கல்வி அமைச்சு, அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

டில்ஷி அம்ஷிகாவின் மரணம் பரிதாபமான ஒன்று.டில்ஷி அம்ஷிகாவுக்கு நடந்த சம்பவம் தொடர்பில் பெற்றோர் நீதி கேட்டு செயல்பட்டார்கள். இறுதியில் மாணவியை பாடசாலையில் இருந்து விலக்கி மற்றுமொரு பாடசாலைக்கு இடமமாற்றம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பில் பாடசாலை மட்டத்தில் முறையான  ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது தான் பெற்றோரின் குற்றச்சாட்டு.கல்வி அமைச்சு இவ்வாறான சம்பவங்கள் நடக்கும் போது பெற்றோர் மற்றும் மாணவிக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

மாணவியின் வாழ்க்கை இல்லாமல் போயுள்ளது. இப்போது பெற்றோருக்கு பிள்ளை இல்லாமல் போய் உள்ளது. இந்த விடயத்துக்கு சமூகமும் பொறுப்புக் கூற வேண்டும். கல்வி அமைச்சு, பாடசாலை இந்த சம்பவத்தில் நீதியான முறையில் செயல்பட்டிருந்தால் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றிருக்காது. இந்த சம்பவத்தால் உள ரீதியாகவும் பாதிக்கப்பட்ட மாணவியை வைத்தியரிடமும் பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர்.

நாட்டில், 43 இலட்சம் மாணவர்கள் உள்ளனர். எல்லோரும் எமக்கு முக்கியம். எந்தவொரு மாணவருக்கும் அநீதி இடம்பெறக் கூடாது. அம்ஷிகாவின் மரணத்தில் நீதியான விசாரணை வேண்டும் என பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளோம் என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »