Our Feeds


Sunday, May 11, 2025

Zameera

மின்சார கட்டண உயர்வை நிறுத்த வலியுறுத்தல் - சஜித் பிரேமதாச


 எதிர்வரும் மின்சாரக் கட்டண திருத்தத்தில் 25% முதல் 30% வரையான அளவில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்த அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சியை உடனடியாக நிறுத்துமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

 

குறித்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

 

தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன், இலங்கையின் கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வை மறுபரிசீலனை செய்வதாக மக்களுக்கு அளித்த வாக்குறுதியை மறந்து, முந்தைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொண்ட உடன்படிக்கைகளை அப்படியே செயல்படுத்துவதன் விளைவாக இப்படி மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் நிலை உருவாகியுள்ளது.

 

 

சர்வதேச நாணய நிதியத்துடன் ஜூலை மாதம் நடைபெறவுள்ள மீளாய்வுக்கு முன் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி நிபந்தனைகளை நிறைவேற்றும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என்பது இப்போது தெளிவாகிறது.

 

 

கடந்த ஆண்டு லாபம் ஈட்டிய இலங்கை மின்சார சபை பெப்ரவரி மாதம் முதல் நட்டமடைந்து வருவதாகவும், அது எண்ணிக்கையில் ரூபா 271.1 பில்லியன் அளவிற்கு இருப்பதாகவும் கூறி, அன்று மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை கைவிட தயாராகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

 

 

ரூபாய் 9000 மின்சாரக் கட்டணத்தை ரூபாய் 6000 வரையும், ரூபாய் 3000 மின்சாரக் கட்டணத்தை ரூபாய் 2000 வரையும் 33% குறைப்பதாக தற்போதைய ஜனாதிபதி தேர்தலுக்கு முன் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை மறந்து, இவ்வாறு நாட்டு மக்களை துன்பத்திற்கு உள்ளாக்குவது ஜனநாயக விரோத செயல் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

 

இதற்கு முன்னரும் தற்போதைய மின்சக்தி அமைச்சர் உட்பட அரசாங்கம் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாது என அறிவித்தபோதும், எதிர்க்கட்சியாக நாங்களும், மின்சார நுகர்வோர் அமைப்புகளும் எழுப்பிய குரலுக்கு பதிலளித்து, பொது பயன்பாட்டு ஆணைக்குழு ஜனவரி மாதத்தில் 20% மின்சாரக் கட்டணத்தைக் குறைத்ததையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

 

அதன்படி, இம்முறையும் மின்சாரக் கட்டண உயர்வுக்கு எதிராக அனைவரையும் ஒன்றிணைத்து இந்த நாட்டின் மின்சார நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாக்க உறுதிபூண்டுள்ளோம் என வலியுறுத்துகிறேன்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »