Our Feeds


Saturday, May 31, 2025

SHAHNI RAMEES

பழைய அரசாங்கங்களைப் போன்று எமது அரசாங்கத்துடன் விளையாட வேண்டாம்!

 



உதய கம்மன்பில உள்ளிட்டோரை  பழைய அரசாங்கங்களைப்

போன்று இந்த அரசாங்கத்துடன் விளையாட முற்பட வேண்டாம் என எச்சரிக்கின்றோம். அவர்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் அவர்களே பொறுப்பு கூற வேண்டும். அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் இருந்தால் அவை தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடளிக்குமாறு பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.


கொழும்பில் வெள்ளிக்கிழமை (30) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,



2015 - 2019இல் கள்வர்களை கைது செய்வதாகக் கூறியே ரணில் - மைத்திரி அரசாங்கம் ஆட்சியமைத்தது. இறுதியில் இரு தரப்பும் ராஜபக்ஷர்களுடன் இணைந்தே செயற்பட்டனர்.


ஆனால் நாம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கின்றோம். எதிர்க்கட்சிகள் எம்மை விமர்சித்தாலும் நாம் எமது பொறுப்புக்களை நிறைவேற்றுவோம்.


எமது அரசாங்கம் எந்த வகையிலும் அரசியல் ரீதியாக நீதித்துறையில் தலையிடுவதில்லை. சட்டம் அதனை கடமையை செய்து கொண்டிருக்கிறது.


தம்மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளவர்கே தற்போது அரசாங்கத்தை விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர். ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். அந்த எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படுகிறது.


விமல் வீரவன்ச கூறும் பட்டியலில் உள்ளவர்களும், அந்த பட்டியலுக்கு அப்பாற்பட்டவர்களும் இனி;வரும் காலங்களில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர். நீதிமன்றமே அதனை தீர்மானிக்கும்.


கம்மன்பில உள்ளிட்ட ஏனைய அனைவருக்கும் ஒரு விடயத்தைக் கூறிக் கொள்ள விரும்புகின்றோம். ரணில் விக்கிரமசிங்கவுடனிருந்த ஹல்லொலுவவுக்கு என்ன நடந்து என்பது தெரியுமல்லவா?



இறுதியில் இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறி நாடகமொன்றும் அரங்கேற்றப்பட்டது. வார்த்தை விளையாட்டுக்களால் ரணில் விக்கிரமசிங்கவும் விசாரணையை எதிர்கொண்டார்.


எனவே பழைய அரசாங்கங்களைப் போன்று இந்த அரசாங்கத்துடன் விளையாட முற்பட வேண்டாம் என எச்சரிக்கின்றோம். அவர்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் அவர்களே பொறுப்பு கூற வேண்டும்.


கம்மன்பில தொடர்பில் சட்டத்தரணியொருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளித்திருக்கின்றார். ஊடகவியலாளர் மாநாடுகளில் கூறிக் கொண்டிருக்காமல் அவர்களும் சீ.ஐ.டி.யில் முறைப்பாடளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அரசாங்கம் என்ற ரீதியில் நாம் ஒருபோதும் அந்த விசாரணைகளில் தலையிட மாட்டோம் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »