Our Feeds


Saturday, May 17, 2025

ShortNews

நான் மஹிந்தவின் மகன்! - பயத்தால் நாம் அரசியல் தீர்மானங்களை எடுப்பதில்லை! - நாமல்



உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது

குறித்து நீண்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றோம். சபைகளை அமைப்பதற்கான வழிமுறைக்கமைய ஒவ்வொரு சபைகளிலும் பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டுள்ள தரப்பினரை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி அமைக்கப்பட வேண்டும். எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையைக் கொண்டுள்ள சபைகளில் அவற்றின் உறுப்பினர்களை பதவிகளுக்கு நியமிக்க ஆதரவளிக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,


பயத்தால் நாம் அரசியல் தீர்மானங்களை எடுப்பதில்லை. அதனை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் அறிவார். 2005இல் அவர் எனது தந்தையுடன் பணியாற்றியிருக்கின்றார்.


மஹிந்த ராஜபக்ஷவைப் பற்றி அவர் அறிவார். நான் அவருடைய புதல்வன். எனவே ஜனாதிபதியோ அல்லது ஜே.வி.பி.யோ எம்மை அச்சுறுத்தி அரசியல் தீர்மானமொன்றை எடுக்க வைக்க முடியும் என்று நினைத்தால் அதற்கு நாம் தயாராக இல்லை.


நாம் மக்கள் ஆணைக்கு மதிப்பளிக்கிறோம். அதனை விடுத்து பொய் சாட்சிகளை உருவாக்கி எம்மை பழிவாங்க எண்ணினால் அதனை எதிர்கொள்ளவும் நாம் தயாராக இருக்கின்றோம்.


நல்லாட்சி அரசாங்கத்திலும் எமக்கெதிராக இவ்வாறு பல செயற்பாடுகள் இடம்பெற்றன. எனவே, அநுரவின் அச்சுறுத்தல்களுக்கு நான் அஞ்சவில்லை.


உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது குறித்து நீண்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறோம். கட்சிகளின் செயலாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு அரசியல் குழு கூட்டத்தில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய சில பிரதான கட்சிகளுடன் சந்திப்புக்கள் இடம்பெற்றிருக்கின்றன.


உள்ளூராட்சி மன்றங்களுக்கென சட்டமொன்று காணப்படுகிறது. அவற்றில் சபைகளை அமைப்பதற்கான வழிமுறையொன்றும் பின்பற்றப்படுகிறது. 


அதற்கமைய ஒவ்வொரு சபைகளிலும் பெரும்பான்மையைப் பெற்றுக் கொண்டுள்ள தரப்பினரை அடிப்படையாகக் கொண்டு ஆட்சியமைப்பது குறித்த தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்.


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தரப்பிலிருந்து சந்திப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த சந்தர்ப்பத்தில் கட்சியின் செயலாளர் கொழும்பில் இல்லாததால், எமது கட்சியின் நிலைப்பாட்டை தெரிவிப்பதற்காக நான் அந்த சந்திப்பில் கலந்து கொண்டேன். ஒன்றிணைந்து சபைகளை நிறுவும் நிலைப்பாட்டிலேயே ரணில் விக்கிரமசிங்க தரப்பு இருக்கிறது.


கட்சி செயலாளர்களே இது குறித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து தீர்மானம் எடுக்க வேண்டும். 2018க்கு முன்னர் இந்த தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட போது நாம் பாராளுமன்றத்தில் அதற்கெதிராக வாக்களித்தோம்.


ஆனால் அன்று அது தமக்கு சாதகமாக அமைந்ததால் ஜே.வி.பி. அதனை ஆதரித்தது. இன்று இந்த தேர்தல் முறைமை அரசாங்கத்துக்கு பாதகமாக அமைவதால் ஜே.வி.பி. அதனை ஏற்க மறுக்கின்றது.


எவ்வாறிருப்பினும் அதிக வாக்குகளைப் பெற்றிருந்தாலும் 50 சதவீதத்தை விட அதிக பெரும்பான்மை எதிர்க்கட்சிகளிடம் இருந்தால், சபைகளை அமைக்கும் உரிமை தேர்தல் முறைமையின் பிரகாரம் அரசியல் கட்சிகளுக்கே காணப்படுகிறது.


எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவற்கு பதிலாக கட்சியின் செயலாளர்களை அழைத்து, சபைகளை நிறுவுவதற்கான திட்டமொன்றை ஜனாதிபதி முன்வைத்திருக்கலாம்.


எவ்வாறிருப்பினும் ஒவ்வொரு சபைகளிலும் மக்கள் ஆணைக்கமையவே தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும். நாம் 38 உள்ளூராட்சி மன்றங்களில் வெற்றி பெற்றிருக்கின்றோம். 


அவற்றில் வெற்றி பெற்றுள்ள சுமார் 700 உறுப்பினர்களை விரைவில் சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயவுள்ளோம் என்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »