Our Feeds


Wednesday, May 28, 2025

Zameera

கொழும்பு மாநகர சபையை ஆளும் தரப்பு கைப்பற்றும் சூழலை ஏற்படுத்திக் கொடுக்கமாட்டோம்


 கொழும்பு மாநகர சபையில் தனித்து பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாத நெருக்கடியான நிலையில் தேசிய மக்கள் சக்தி உள்ளது.  ஆளுங்கட்சி கொழும்பு மாநகர சபையை கைப்பற்றுவதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க போவதில்லை. பிரதான எதிர்க்கட்சி  முறையான கொள்கைத் திட்டத்தை முன்வைத்தால் அவர்களுக்கு ஆதரவு வழங்குவது குறித்து பரிசீலனை செய்வோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கை அரசியல் வரலாற்றில் ஆட்சிக்கு வந்து 7 மாத காலத்துக்குள் 23 இலட்ச வாக்குகளை இழந்த ஒரே அரசாங்கமாக தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் பெயர் பெற்றுள்ளது. பாராளுமன்றத்தில் 159 பெரும்பான்மையை தக்கவைத்துக்கொண்டுள்ள அரசாங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பாரிய பின்னடைவை எதிர்கொண்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களில் பெரும்பாலானோர் அரசியலுக்கு புதியவர்கள். அதனால்தான் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை என்று ஆளும் தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். ஆளும் தரப்பின் 159 உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் புதியவர்கள். பலரின் பெயர் கூட மக்களுக்கு தற்போது நினைவில் இருக்காது. அவ்வாறாயின் இந்தப் புதியவர்கள் எவ்வாறு பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றார்கள்.

தேசிய மக்கள் சக்தி நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் பொய் மற்றும் வெறுப்பினை முன்னிலைப்படுத்தி வெற்றி பெற்றது.  6 மாத காலத்துக்குள் மக்கள் உண்மையையும், தாம் ஏமாற்றப்பட்டதையும் நன்கு அறிந்துகொண்டார்கள். அந்த எதிர்ப்பையே உள்ளூராட்சி மன்றத்  தேர்தலில் வெளிப்படுத்தினார்கள். ஆகவே, மக்களின் அபிலாசைகளை அரசாங்கம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

கொழும்பு மாநகர சபையில் தனித்து பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாத நெருக்கடியான நிலையில் தேசிய மக்கள் சக்தி உள்ளது. தேசிய மக்கள் சக்தி கொழும்பு மாநகர சபையை கைப்பற்றுவதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்திக்கொடுக்கப் போவதில்லை.

கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பிரதான எதிர்க்கட்சி முறையான கொள்கைத் திட்டத்தை முன்வைத்தால் அவர்களுக்கு ஆதரவு வழங்குவது குறித்து பரிசீலனை செய்வோம் என்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »