கடந்த அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 40பேரை கைதுசெய்து சிறையில் அடைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது சிறையில் இருப்பவர்கள் சிலரும் அந்த பட்டியலில் இருக்கின்றனர் என தேசிய சுதந்தி முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணல் ஒன்றின் பாேதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரச நிறுவனங்களின் அதிகாரிகளை கைதுசெய்து சிறைக்கு அனுப்பும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. நல்லாட்சி அரசாங்க காலத்திலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போதும் அந்த அரசாங்கத்தில் இந்த நடவடிக்கையை அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அவருடன் இருந்தவர்களே மேற்கொண்டுவந்தனர்.
உர கப்பல் ஒன்றுக்கு பணம் செலுத்தியதாக தெரிவித்து அரச அதிகாரிகள் சிலர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவை கைதுசெய்து சிறையில் அடைத்தார்கள். இவ்வாறு செயற்பட்டால் அரச இயந்திரம் செயலிழந்துவிடும்.
அரச அதிகாரிகள் எந்த தீர்மானங்களையும் எடுக்காமல்போகும் நிலை ஏற்படும். தீர்மானம் எடுத்தால் சிறைக்கு செல்ல நேரிடும் என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்படும்.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு 29ஆம் திகதி வருமாறு எனக்கும் அழைப்பு வந்திருக்கிறது. வீடமைப்பு அமைச்சராக இருந்த காலத்தில், வீடமைப்பு அதிகாரசபை அதிகாரிகள், மாலிகாவத்தையில் இடிந்துவிழும் நிலையில் இருந்த கடைத்தொகுதி ஒன்றை அதிகாரசபையின் நிதி மூலம் அதனை செப்பனிட்டு, அதனை வாடகைக்கு வழங்க கேள்விகோரல் விடுத்திருக்கின்றனர்.
யாரும் வராதநிலையில் அதில் விலை குறைப்பு மேற்கொண்டு மீண்டும் கேள்விகோரலுக்கு விட்டபோது ஒருவர் அதனை வாங்கி இருக்கிறார். இதற்கான அனுமதி அப்போது இருந்த குழுக்களின் அனுமதியை பெற்றுக்கொண்டு, இறுதியாக பணிப்பாளர் சபை, அதற்கு அனுமதி வழங்கி இருக்கிறது.
இதற்கும் அமைச்சருக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் வீடமைப்பு அதிகாரசபையின் நடவடிக்கையால் அரசாங்கத்துக்கு நட்டமடைந்துள்ளதாகவும். அப்போது இந்த விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்றவகையில் இதுதொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்காெள்ள வருமாறு அழைப்பு வந்திருக்கிறது.
எப்படியாவது எம்மை சிக்க வைக்க வேண்டும் என்ற அடிப்படையில் பழைய விடயங்களை அரசாங்கம் கிழறிக்கொண்டிருக்கிறது. இவ்வாறு கைதுசெய்வதற்கு 40பேரின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது.அதில் தற்போது செயற்பாட்டு அரசியலில் இருப்பவர்களும் இ்ல்லாதவர்களும் அடங்குகின்றனர். அந்த பட்டியலில் தற்பாேது கைதுசெய்யப்பட்டு சிறையில் இருப்பவர்கள் சிலரும் அடங்குகின்றனர். அதேபோன்று முன்னாள் அமைச்சர்களான காஞ்சன விஜேசேகர, ரமேஷ் பத்திரண ஆகியோரின் பெயர்களும் உள்ளடங்குகின்றன.
நிறுவனம் ஒன்றின் பணிப்பாளர் நாயகம் அடிக்கடி ஜனாதிபதி செயலகத்துக்கு சென்று அதுதொடர்பில் ஆலாேசனை கேட்டுவருகிறார். ஜனாதிபதி செயலகத்திலே இந்த பெயர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அரசாங்கத்துக்கு வாக்குகள் குறைவடைய காரணம் திருடர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறியமையாகும் என்றே இவர்கள் நினைக்கின்றனர்.அதனடிப்படடையிலே தற்போது 40பேரை கைதுசெய்து சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
(எம்.ஆர்.எம்.வசீம்)