அறுகம் குடாவில் பிக்னி தடை செய்யப்பட்டுள்ளது என வெளியான பொய்யான தகவல்கள் குறித்து உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சினையும் பொலிஸ்மா அதிபரையும் கேட்டுக்கொண்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
சுற்றுலாத்துறையை இலக்குவைத்து பொய்யான தகவல்களை பரப்புவதன் மூலம் அரசாங்கத்திற்கு அவமானத்தை ஏற்படுத்துவதற்கு குழுவொன்று முயல்கின்றது.
இந்த விடயம் குறித்து பாதுகாப்பு அமைச்சு,பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு அறிவுறுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அறுகம்குடாவில் சுற்றுலாப்பயணிகள் காணப்படும் பகுதியில் வெளிநாட்டு பயணியொருவர் நிர்வாணமாக நடந்து சென்றதன் பின்னரே இந்த விவகாரம எழுந்துள்ளது.
இந்த விடயத்தை அடிப்படையாக வைத்து பிக்னி தடை குறித்து சமூக ஊடகங்களில் பொய்யான செய்திகளை பரப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அரசாங்கம் பிக்னி தொடர்பில் எந்த தீர்மானங்களையும் எடுக்கவில்லை.
முஸ்லீம் சமூகத்தினருக்கும் ஏனையவர்களிற்கும் இடையில் பிரச்சினையை உருவாக்கும் அரசாங்கத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே இந்த சமூக ஊடக பதிவு வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக நாட்டின் சுற்றுலாத்துறைக்கும் பொருளாதாரத்திற்கும் கடும் பாதிப்புகள் ஏற்படலாம்,இலங்கைக்கு பல வெளிநாட்டு சுற்றுலாபயணிகள் விஜயம் மேற்கொள்கின்றனர்,இவ்வாறான செய்திகள் அவர்கள் மாலைதீவு பாலி போன்றவற்றிற்கு செல்லும் நிலையை ஏற்படுத்தலாம்.
அலைச்சறுக்கலிற்கு இலங்கையில் அறுகம்குடாவே பெயர் பெற்றது,இலங்கை ஒரு மில்லியன் சுற்றுலாப்பயணிகளை வரவேற்க்கும் இந்த தருணத்தில்,இவ்வாறான சம்பவங்கள் இலங்கைக்கு சர்வதேச அளவில் அபகீர்த்தியை ஏற்படுத்தலாம்.
உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்காக அரசாங்கம் எதிர்வரும் ஆறாம் திகதி முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ள நிலையில் அந்த பேச்சுவார்த்தைகளை குழப்பும் நோக்கத்துடனும் இந்த முயற்சிகளை மேற்கொண்டிருக்கலாம்,அரசியல் நெருக்கடியை உருவாக்குவதற்கான முயற்சியாக இது இருக்கலாம்.