Our Feeds


Wednesday, May 28, 2025

SHAHNI RAMEES

எப்பிடி சிஸ்டம் சேஞ்ச் - நல்லாமா?

 


கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தில் இடம்பெற்ற

வெள்ளை சீனி மோசடியைப் போன்று தற்போது உப்பு மோசடி இடம்பெறுகிறது. 24 ரூபாவுக்கு இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ உப்புக்கு 40 ரூபா வரி அறவிடப்படுகிறது. அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு வட் வரியை நீக்குவதாகக் கூறிய அரசாங்கமே தற்போது இவ்வாறானதொரு மோசடியில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.


கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் செவ்வாய்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,



உப்பு தட்டுப்பாடு ஏற்படவுள்ளமை தொடர்பில் சில மாதங்களுக்கு முன்னரே அரசாங்கம் அறிந்திருந்தது. அது தொடர்பில் தாம் அறிந்திருக்கவில்லை என அரசாங்கத்தால் கூற முடியாது. மழை காரணமாக உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுவது பொய்யாகும். இதற்கு முன்னர் இருந்த ஆட்சியில் மழை பெய்யவில்லையா? மழை பெய்வதற்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வேண்டுமா?


தமது இயலாமையை மறைப்பதற்கு இயற்கையின் மீதும் பழி சுமத்துகின்றனர். சுனாமி ஆழிப் பேரலையால் பாரதூரமான அழிவுகள் ஏற்பட்ட போதும் கூட வெளிநாடுகளிலிருந்து உப்பு இறக்குமதி செய்யப்படவில்லை. அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தால் உப்பு இறக்குமதி செய்யப்பட்டு, அவற்றை சந்தைகளில் விநியோகிப்பதற்காக தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டன.


அந்த நிறுவனங்களால் ஒரு கிலோ உப்பு 350 - 400 ரூபாவுக்கு வழங்கப்பட்டது. இலங்கையில் உப்பு ஒரு கிலோ 130 ரூபாவாகக் காணப்பட்டது. இந்தியாவிலிருந்து ஒரு மெட்ரிக் தொன் உப்பு 80 டொலருக்கு இறக்குமதி செய்யப்பட்டது. அவ்வாறெனில் ஒரு கிலோ உப்பு இலங்கை விலைப்படி 24 ரூபாவாகும். ஆனால் ஒரு கிலோ உப்புக்கு 40 ரூபா இறக்குமதி வரி அறவிடப்படுகிறது.


இறக்குமதி செலவை விட இரு மடங்குக்கும் அதிகமாக வரி அறவிடப்படுகிறது. போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளை உள்ளடங்கினாலும் ஒரு கிலோ உப்பினை ஆகக் குறைந்தது 100 ரூபாவுக்கு வழங்க முடியும். ஆனால் சந்தைகளில் 350 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அரசாங்கம் இறக்குமதி செய்து தனியார் கம்பனிகளுக்கு வழங்குகிறது. தனியார் கம்பனிகள் அவற்றை 350 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றன.



இது கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தில் இடம்பெற்ற வெள்ளை சீனி மோசடியைப் போன்றதாகும். 400 கிராம் உப்பு 170 ரூபாவாகும். மக்களுக்கு இது தெரிவதில்லை. அவர்கள் விலையை மாத்திரமே பார்க்கின்றனர். அளவைப் பார்ப்பதில்லை. ஒரு கிலோ கிராம் உப்பை 130 ரூபாவுக்கு கொள்வனவு செய்த மக்கள் இன்று 400 கிராம் உப்பை 170 ரூபாவுக்கு கொள்வனவு செய்கின்றனர்.


கடந்த அரசாங்கத்தில் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை 80 ரூபாவாக அதிகரித்த போது, அரசாங்கம் முட்டையை இறக்குமதி செய்து 35 ரூபாவுக்கு வழங்கியது. அவ்வாறெனில் இந்த அரசாங்கமும் உப்பினை குறைந்த விலையில் அல்லவா வழங்க வேண்டும்? அத்தியாவசிய பொருட்களுக்கு வட் வரியை நீக்குவதாகக் கூறிய அரசாங்கம் இன்று இறக்குமதி செலவை விட அதிக வரியை அறவிடுகிறது என்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »